நம் பிரதிநிதியாகிய இயேசு, ஆச்சரியமானவைகளைச் செய்திருக்கிறார்

 

நாம் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, இயேசு நம்முடைய மரணத்தை மரித்தார்

 

கிறிஸ்து எவ்வாறு மனுஷ இனத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார், அதன் குற்றத்திற்கு அவர் எவ்வாறு
பரிகாரம் செய்தார் என்பதை நமக்கு எடுத்துக் காண்பிக்கிற சில வேதவசனங்களை பார்ப்போம்.

 

ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது
மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள்
யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15).

 

ஆதாம் தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் செய்து, கீழ்ப்படியாமல் போனபோது, ஆளுகை செய்யும் ராஜா
என்ற ஸ்தானத்திலிருந்து, அடிமை என்ற நிலையை நோக்கி அவன் வீழ்ந்தான். ராஜாவாயிருந்த அவன் அடிமையாய்
மாறினான். அவன் சாத்தானால் கட்டப்பட்டான். மரணமும், எல்லா விதமான சீர்கேடுகளும் அவனை ஆட்கொண்டன.

 

அவனால் அதிலிருந்து விடுதலையாக முடியவில்லை. ஆனால் அந்த அடிமைத்தனத்திலிருந்து மனுக்குலத்தை விடுதலை
செய்ய வேண்டுமென்றால், இயேசுவும் ஒரு மனுஷனாய், ஆதாமின் சந்ததியில் பிறக்க வேண்டியிருந்தது. மாம்சத்தையும்
இரத்தத்தையும் உடையவர்களாய் நீங்களும் நானும் பிறந்திருக்கிறோம். இயேசுவும் அதே மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவராய் பிறந்தார். அவர் தம்முடைய மரணத்தினால், மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனை அழிக்கும்படி
அப்படிப் பிறந்தார்.

 

மரணத்தின் பயத்தினால் பிடிக்கப்பட்டு, அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்
எல்லோரையும் விடுதலையாக்கும்படி அவர் அதை ஏற்றுக் கொண்டார். சிலுவையில் இயேசு, மனுக்குலத்தினுடைய
விழுந்துபோன சுபாவத்தையும், அவர்களுடைய பாவங்களெல்லாவற்றையும் தன் மேல் ஏற்றுக் கொண்டார். இது 1 பேதுரு
2:24-ல் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே
(இயேசுதாமே) தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால்
குணமானீர்கள்.”

 

சிலுவையில் இயேசு, நம்முடைய பாவத்தையும், அதன் நிமித்தம் நம் மீது வர வேண்டிய தண்டனையையும்
முழுமையாக தன் மேல் ஏற்றுக் கொண்டார். இறுதியாக, முடிவாக, இயேசு தம்மையே மிகப் பெரிய குற்ற நிவாரண
பலியாக ஒப்புக் கொடுத்தார். அது பாவம் மற்றும் மனுக்குலத்தின் மீது வர வேண்டிய தண்டனை என்ற பிரச்சனைகளுக்கு
தீர்வாக அமைந்தது. அவர் நம்முடைய பாவத்தையும், நம் மீது வர வேண்டிய தண்டனையையும் தன் மேல் ஏற்றுக்
கொண்டார். நம் மீது வர வேண்டிய காயங்களை, அவர் ஏற்றுக் கொண்டார். அவர் நம்முடைய மரணத்தை மரித்தார்.

 

அவர் நம்முடைய பிரதிநிதியாய் இருந்து, முரட்டாட்டத்தின் நிமித்தம் நம் மீது வர வேண்டிய தண்டனைக்கு பரிகாரம் செய்தார்.
நம்மை மீட்கும்படி, அவர் கடைசி ஆதாமாய், சிலுவையில் தொங்கினார், தம்முடைய ஜீவ ரத்தத்தைச் சிந்தினார்,
தம்மையே முழுமையாய் ஒப்புக்கொடுத்தார்.

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. என்னை மீட்கும்படி, நீர் உம்மையே முழுமையாய்
ஒப்புக்கொடுத்தீர். இயேசு என்னுடைய மரணத்தை மரித்தார். அதன் மூலம், நான் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment