ஏப்ரல் 20, ரோமர் நிருபத்தில் எழுதப்பட்டிருக்கிற “செயல்முறை (Recipe)”

நாம் அவருடைய நீதியினால் நீதிமான்களாக்கப்படும்படி, இயேசு நம்முடைய பாவத்தினால் பாவமாக்கப்பட்டார்

ரோமர் நிருபத்தின் 6-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிற முக்கியமான குறிப்புகள் அடங்கிய “செயல்முறையை” இப்பொழுது நாம் பார்ப்போம். “செயல்முறை (Receipe)” என்ற வார்த்தை, சமையல் குறிப்புகள் அடங்கிய ஒரு புத்தகத்தை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

ஒரு சமையல்காரர் சமையல்குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை எவ்வாறு பயன்படுத்துவாரோ, அதே எளிமையான நடைமுறையில், கிறிஸ்தவர்களாகிய நாமும் வேதாகமத்தைப் பயன்படுத்துவோம் என்றால், தேவனுடைய செயல்முறைகள் எப்பொழுதுமே வேலை செய்யும் என்பதை நாம் கண்டறிந்து கொள்வோம்.

ரோமர் நிருபத்தில் எழுதப்பட்டிருக்கிற செயல்முறை, சுவிசேஷத்தின் சத்தியங்களை நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்ய வைப்பதற்கான தேவனுடைய வழிமுறையாய் இருக்கிறது.

ஆகையால் என்ன சொல்வோம்? கிருபை பெருகும்படிக்கு பாவத்தில் நிலைநிற்கலாம் என்று சொல்வோமோ? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.

ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். மரணம் இனி அவரை ஆண்டு கொள்வதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். (ரோமர் 6:1-10).

இந்தச் செய்முறையினால் உண்டாகும் விளைவு, மிகவும் வலிமையானது. இது நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. பாவம் இனி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாது, உங்களைக் கட்டுப்படுத்தாது.

பாவம் உங்களுடைய எஜமானாய் இருக்காது. இதுதான் அந்த விளைவு. இயேசுகிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறிச் செல்லுதலோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம், பாவத்திலிருந்தும், அதன் எல்லா பொல்லாத தீய விளைவுகளிலிருந்தும் நமக்கு விடுதலை உண்டாகிறது.

        

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. பாவம் என்னை ஆளுகை செய்ய முடியாது, பாவத்தின் ஆதிக்கம் இனி என் மீது இருக்க முடியாது என்று அறிக்கை செய்கிறேன். காரணம், நான் அவருடைய நீதியினால் நீதிமானாக்கப்படும்படி, இயேசு என்னுடைய பாவத்தினால் பாவமாக்கப்பட்டார். ஆமென்.