ஏப்ரல் 24, நமக்காக அவர் பட்ட பாடுகள்

நாம் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, இயேசு நம்முடைய மரணத்தை மரித்தார்

சிலுவையில் இயேசு பட்ட பாடுகள் மற்றும் வலிவேதனைகளைக் குறித்த விவரமான ஒரு தீர்க்கதரிசன வருணனையை ஏசாயா 53-ம் அதிகாரம் நமக்குக் கொடுக்கிறது. இது நிகழ்வதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது.

அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் அவர் தம்முடைய வாயை திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும், நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்.

அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும். ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார். என் ஜனத்தின் மீறுதலின் நிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்.

ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார். அவர் கொடுமை செய்யவில்லை. அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. (ஏசாயா 53:7-9).

இதில் எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயமும், இயேசுவின் சிலுவைப் பாடுகள் மற்றும் மரணத்தில் துல்லியமாக அப்படியே நிறைவேறியது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதிலளிக்கும்படி இயேசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; அவர் தனக்காக வழக்காடவில்லை; அவர் தன் நியாயத்தை எடுத்துரைக்கவில்லை; அவர் தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ளவில்லை என்று நான்கு சுவிசேஷங்களிலும் பல முறை முக்கியப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டிற்கு, மாற்கு 15:3-5 வசனங்களை வாசித்துப் பாருங்கள். அநியாயமான குற்றச்சாட்டுகளும், அநீதியான முறையில் நிகழ்ந்த வழக்கு விசாரணையும்தான் அவருடைய மரணத்திற்கு காரணமாய் இருந்தது. ஆம், “அவர் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்.”

அவருடைய அடக்கத்தைக் குறித்த விஷயங்கள், ஆச்சரியமான விதத்தில் துல்லியமாக இருக்கின்றன: “துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள். ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்.”

இங்கு “துன்மார்க்கர்” என்று பன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிற நிலையிலிருந்து, “ஐசுவரியவான்” என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஒரு நிலைக்கு கடந்து செல்வதை நாம் பார்க்கின்றோம்.

வரலாற்றுரீதியில் பார்க்கும்போது, இயேசு அங்கே இரண்டு திருடர்கள் நடுவில் சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர் அடக்கம் பண்ணப்பட்டபோது, அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு எனும் ஒரு ஐசுவரியவானுடைய கல்லறையில் அவர் அடக்கம் பண்ணப்பட்டார் என்பதையும் நாம் அறிந்து கொள்கின்றோம்.

இயேசு தான் செய்த பாவத்திற்காகவோ அல்லது குற்றத்திற்காகவோ மரிக்கவில்லை என்பதை ஏசாயா முக்கியப்படுத்தி வலியுறுத்திச் சொல்கிறார். அவர் ஒரு பாவமும், குற்றமும் செய்யாதவராக இருந்தார். ஆனாலும் அவர் ஒரு குற்றவாளியின் மரணத்தை ஏற்றுக் கொண்டு மரித்தார்.

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நீர் எனக்காக பாடுகள் பட்டீர். நீர் எனக்காக மரித்தீர். இயேசு என்னுடைய மரணத்தை மரித்தார். அதன் மூலம், நான் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறேன். ஆமென்.