ஆகஸ்ட் 2, நாம் தேவனுடைய பிள்ளைகளும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரவாளிகளுமாயிருக்கிறோம்

நான் தேவனுடைய பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்

ரோமர் 8:15-17 வசனங்களில், கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்ததன் மூலம், கிறிஸ்தவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கும்படி இருக்கின்றன என்பதைக் குறித்து பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருக்கிறார்.

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே (Abba Father) என்று கூப்பிடப் பண்ணுகிற (பரிசுத்த ஆவியானவரை) புத்திரசுவிகாரத்தின் ஆவியானவரைப் பெற்றீர்கள்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால், சுதந்தரருமாமே. தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே.

கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூட பாடுபட்டால் அப்படியாகும். 

‘அப்பா (Abba)’ என்ற வார்த்தை, “டாடி” என்ற ஆங்கில வார்த்தைக்குச் சமமான அரமாயிக் அல்லது எபிரெய வார்த்தையாகும். அப்பா என்றழைக்கக்கூடிய அளவிற்கு பிதாவாகிய தேவனோடு நாம் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறோம்.

தேவனுடைய ஆவியானவர்தாமே நமக்கு அந்த நிச்சயத்தையும், தைரியத்தையும் கொடுக்கின்றார்.

நாம் தேவனுடைய பிள்ளைகள், தேவனுடைய ஆவியானவர்தாமே நம் ஒவ்வொருவருடைய இருதயங்களிலும் தனிப்பட்ட விதத்தில் இந்தச் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறார் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது.

நாம் தேவனுடைய பிள்ளைகள். நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்போது, நாம் சுதந்தரவாளிகளாகிறோம். நாம் தேவனுடைய சுதந்தரவாளிகளாக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரவாளிகளாகவும் நாம் மாறுகின்றோம்.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இங்கு சேர்க்கப்பட்டிருக்கிறது. நாம் அவருடைய பாடுகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்களாயிருக்கிறோமா என்பதுதான் அந்த நிபந்தனை.

நாம் அவருடைய சுதந்தரத்தில் பங்கடைகிறோம் என்றால், நாம் அவருடைய பாடுகளிலும் பங்கு பெறுகிறோம் என்று அர்த்தம். அழுத்தம் மற்றும் இறுக்கங்களைத் தாண்டிய பிறகுதான் ஒரு முத்து கிடைக்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உடன் சுதந்தரவாளிகள் என்றால் என்ன என்பதையும் நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சுதந்தரத்தில் ஒரு சிறிய பகுதியை நாம் ஒவ்வொருவரும் பெறுகின்றோம் என்பது இதற்கு அர்த்தமல்ல.

மாறாக, தேவனுடைய முதல் குமாரனாகிய இயேசுவிடம் ஒட்டுமொத்த சுதந்தரமும் இருக்கின்றது. நாம் இந்த ஒட்டுமொத்த சுதந்தரத்தையும் அவரோடு சேர்ந்து பங்கிட்டுக் கொள்கிறோம். இயேசுவின் சுதந்தரமாகிய இந்த முழு சுதந்தரத்தின் மீது நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உண்டு.

பங்கிட்டுக் கொள்ளுதல் என்பது தேவனுடைய ராஜ்யத்தின் பிரமாணமாயிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அவரவருடைய தனிப்பட்ட பங்கை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்கிற ஒரு நிலை இங்கு நிச்சயமாகக் கிடையாது.

மாறாக, பிதாவாகிய தேவனிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, குமாரனாகிய கிறிஸ்துவிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை எல்லாவற்றையும் நாம் எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து பங்கிட்டுக் கொள்கிறோம்.

நன்றி கர்த்தாவே, நீர் என்னை அன்பினால் தெரிந்து கொண்டீர். உமக்கு நன்றி. நான் தேவனுடைய பிள்ளை, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரன் என்று அறிக்கை செய்கிறேன். நான் தேவனுடைய பிள்ளையாய் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன். ஆமென்.