ஆகஸ்ட் 4, பக்குவமடைந்த பிள்ளைகளாய் வளருதல்

நான் தேவனுடைய பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்

நாம் குழந்தைகளாய், சிறுபிள்ளைகளாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமல்ல. நாம் பக்குவமடைந்த பிள்ளைகளாய் வளர வேண்டும் என்று தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்திலும் நாம் பரிசுத்த ஆவியானவரை மட்டுமே சார்ந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், அவரைத் தவிர்த்து விட்டு, நாம் வளரவே முடியாது.

நாம் பக்குவமடையவே முடியாது. ரோமர் 8:14-ல் பவுல் சொல்கிறார், “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.”

இவ்வசனத்தில் “புத்திரர்” என்ற வார்த்தை, மற்ற வேதப்பகுதிகளில் வருகிற “சிறுபிள்ளைகள்” என்ற அதே வார்த்தையல்ல.

இது பக்குவமடைந்து வளர்ந்த ஒரு பிள்ளையை, தன் வாழ்க்கையில் கட்டுப்பாட்டை உடைய பொறுப்புள்ள ஒரு பிள்ளையை, எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்படுகிற ஒரு பிள்ளையை, தனக்கிருக்கும் அதிகாரத்தை உணர்ந்து, அதை ஒழுங்காகப் பயன்படுத்துகிற பிள்ளையை குறிக்கிறது.

பக்குவமடைந்து வளருகிற ஒரு நிலைக்கு நாம் எவ்வாறு வருகின்றோம்? பவுல் சொல்கிறார், “எவர்கள் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.”

இது தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாகிய நம்மை பக்குவப்படுத்தும்படி, நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற இரண்டாவது மிக முக்கியமான ஊழியமாகும். ஆனால் இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது.

அது தேவனுடைய ஆவியானவரால் வழிநடத்தப்படுவதாகும். பக்குவமடைந்து வளருவதற்கு வேறு ஒரு வழியுமில்லை. அது மட்டுமல்ல, “நடத்தப்படுதல்” என்றால், அது ஒரு தொடர்ச்சியான கிரியையாக இருக்கிறது.

நாம் தேவனுடைய ஆவியானவரால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடர்ந்து வழி நடத்தப்பட வேண்டும். நன்கு பக்குவமடைந்து வளர்ந்த தேவனுடைய பிள்ளைகளாய் நாம் வாழ வேண்டுமென்றால், அதற்கு இது மட்டுமே ஒரே வழியாயிருக்கிறது.

இன்றைக்கு சபையில் காணப்படும் வருந்தத்தக்க, பரிதாபமான ஒரு நிலை என்ன தெரியுமா? தேவனுடைய ஆவியானவரால் மறுபடியும் பிறந்து இரட்சிக்கப்பட்ட பல கிறிஸ்தவர்கள், தேவனுடைய ஆவியானவரால் வழி நடத்தப்படுதல் என்றால் என்ன என்பதை இன்னும் கற்றுக் கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எண்ணிக்கையிலடங்காத கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இவர்கள் ஒருபோதும் பக்குவமடைந்து வளர்ச்சியடையவே இல்லை.

ஒரு விதத்தில், அவர்கள் இன்னும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுடைய வளர்ச்சிக்காக தேவன் எதையும் முன் ஆயத்தம் செய்து வைக்கவில்லை என்பதல்ல.

மாறாக, தேவன் செய்து வைத்திருக்கிற முன் ஆயத்தத்திற்கு எவ்வாறு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் காரணம். அதற்காக தேவன் செய்து வைத்திருக்கிற முன் ஆயத்தம், பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுவதுதான்.   

நன்றி கர்த்தாவே, நீர் என்னை அன்பினால் தெரிந்து கொண்டீர். உமக்கு நன்றி. நான் தேவனுடைய பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுவதன் மூலம், நான் பக்குவமடைந்து வளருகிற ஒரு நிலைக்குள்ளாய் கடந்து செல்வேன். ஆமென்.