நாம் ஒரே குடும்பமாய் இருக்கிறோம்

பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன்

புதிய ஏற்பாட்டில், தேவனுடைய ஜனங்கள் மிகவும் அரிதாகத்தான் “கிறிஸ்தவர்கள்” என்றோ அல்லது “விசுவாசிகள்” என்றோ அழைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒரே ஆவிக்குரிய குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை வலியுறுத்தி முக்கியப்படுத்தும்படி, “சகோதரரே” என்றுதான் அவர்கள் பெரும்பாலும் அழைக்கப்படுகின்றனர். எபேசியர் 2:18-ல் பவுல் எழுதியபடி, “அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் (யூதர்களும், ஒரே மெய்த் தேவனை அறியாத அந்நியர்களும்) ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் (கிறிஸ்துவின்) மூலமாய் பெற்றிருக்கிறோம்.”

இங்கே ஒன்றைக் கவனியுங்கள். தேவனுடைய திரித்துவத்தின் மூன்று நபர்களும் இங்கே சுட்டிக் காண்பிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். குமாரனாகிய இயேசுவின் வழியாக, ஒரே ஆவியானவர் மூலமாய், நாம் பிதாவாகிய தேவனிடத்தில் சேருகிறோம்.

நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஒரு ரிசல்ட்டை இது உண்டு பண்ணியிருக்கிறது. அதை அடுத்த வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது: “ஆகையால் (அதாவது நீங்கள் பிதாவாகிய தேவனிடத்தில் சேர்ந்திருக்கிறபடியால்), நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும், தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறீர்கள்” (19-ம் வசனம்).

“வீட்டார்” என்றால், தற்கால வழக்கத்தில், “குடும்பத்தார்” என்று சொல்லலாம். கிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்தில் நம்மைக் கொண்டு சேர்த்திருக்கிறபடியால், நாம் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாய் மாறியிருக்கிறோம்.

தேவனுடைய குடும்பத்தின் கட்டமைப்பானது, பிதாவாகிய தேவனோடு அதன் அங்கத்தினர்களின் உறவைப் பொறுத்து அமைந்திருக்கிறது. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில், பிதாவாகிய தேவனுக்கும், குடும்பத்திற்கும் இடையே மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பும், பொருத்தமும் இருக்கிறது. “பிதா” என்றால், “பேட்டர் (Pater)” என்ற கிரேக்க வார்த்தையும், “குடும்பம்” என்றால், “பேட்ரியா (Patria)” என்ற கிரேக்க வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.

“பேட்டர் (பிதா)” என்ற வார்த்தையிலிருந்து, “பேட்ரியா (குடும்பம்)” என்ற வார்த்தை வந்திருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள இவ்வளவு நெருக்கமான தொடர்பு, பவுலின் ஜெபத்தில் தெளிவாய் கொண்டு வரப்படுகிறது:

இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் நாம காரணராகிய (பெயர்க் காரணராகிய) நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறேன். (எபேசியர் 3:14-15)

“பிதா” மற்றும் “குடும்பம்” என்ற வார்த்தைகளுக்கிடையே ஒரு நேரடித் தொடர்பு இங்கே உண்டு. பிதாவாகிய (பேட்டர் Pater) தேவனிடமிருந்து, பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்திற்கும் (பேட்ரியா Patria) பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிதாவிடமிருந்துதான் குடும்பம் பிறந்திருக்கிறது. தேவனை நம்முடைய பிதாவாகக் கொண்டிருக்கிறபடியால், அதுதான் நம்மை அவருடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாக மாற்றியிருக்கிறது. 

நன்றி கர்த்தாவே, இப்பொழுது நான் உம்மிடம் வர முடியும்.  பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன். 
அது மட்டுமல்ல, இப்பொழுது நான் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக மாறியிருக்கிறேன்.

ஆமென்............................................................