ஆகஸ்ட் 10, பிதாவாகிய தேவனிடம் நம்மைக் கொண்டு சேர்த்திருக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன்

“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று இயேசு சொன்னார் (யோவான் 14:6). நாம் அடிக்கடி இவ்வசனத்தை மேற்கோள் காண்பித்துப் பேசுகிறோம்.

சுவிசேஷக் கூட்டங்களில் மிகவும் அதிகமாய் பயன்படுத்தப்படுகிற ஒரு வசனம் இது. ஆனால் இவ்வசனம் உண்டாக்கக்கூடிய முழுமையான தாக்கத்தை நாம் எப்பொழுதாவதுதான், அரிதாகத்தான், நின்று, சிந்தித்துப் பார்க்கிறோம்.

ஒரு வழி என்று சொல்லும்போது, அது நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கூட்டிக் கொண்டு செல்லவில்லை என்றால், அது அர்த்தமற்றதாகி விடும்.

ஒரு வழி என்றால், அது அங்கேயே முடிந்து விடுவதில்லை. ஆகையால்தான் “நானே வழி” என்று இயேசு சொன்னபோது, அவர் நம்மை ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்லும் ஒரு வழியாயிருக்கிறார் என்ற அர்த்தத்தில் அவர் சொல்கிறார்.

அவர் நம்மை எங்கே கூட்டிச் செல்கிறார்? அதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுக்கிறார். “என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்,” என்பதுதான் அவரது பதில் (6-ம் வசனம்).

வேறு வார்த்தைகளில், அவரே அதை இவ்வாறு சொல்கிறார், “நானே பிதாவாகிய தேவனிடம் செல்வதற்கான வழியாயிருக்கிறேன். நானே பிதாவின் வெளிப்பாடாய் இருக்கிறேன். நீங்கள் என்னைக் கண்டீர்கள் என்றால், நீங்கள் பிதாவாகிய தேவனைக் கண்டீர்கள் என்று அர்த்தம்.” (7-9 வசனங்கள்)

அல்லாமலும், அவர்(இயேசு) வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும்(ஒரே மெய்த்தேவனை அறியாத அந்நியர்களாகிய உங்களுக்கும்), சமீபமாயிருந்த அவர்களுக்கும்(யூதர்களுக்கும்) சமாதானத்தை சுவிசேஷமாக அறிவித்தார்.

அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் (யூதர்களும், அந்நியர்களும்) ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசுவின்) மூலமாய் பெற்றிருக்கிறோம். (எபேசியர் 2:17-18)

திரும்பவும் சொல்கிறேன், இந்த ஒரு வசனத்தில் தேவனுடைய திரித்துவத்தின் மூன்று நபர்களைக் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. குமாரனாகிய இயேசுவின் மூலம், ஒரே ஆவியானவரால், பிதாவாகிய தேவனிடத்தில் என்ற வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்க்கின்றன.

ஆனால் பிதாவே, நாம் சென்றடையும் இடமாய், இலக்காய் இருக்கிறார். பிதாவை விட்டு விட்டீர்கள் என்றால், இவ்வசனத்திற்கு அர்த்தமில்லாது போய் விடும். இதன் உச்சகட்ட இலக்கும், நோக்கமும், பிதாவை வெளிப்படுத்தி, நம்மை அவரிடம் கொண்டு செல்வதுதான்.

இந்தக் குறிக்கோளை அடைவதில் பாதியிலேயே நாம் நிறுத்தி விட்டோம் என்றால், இயேசு என்ன நோக்கத்திற்காக வந்தாரோ, அதையே நாம் தவற விட்டு விட்டோம் என்று அர்த்தம்.

ஏனெனில் கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார். (1 பேதுரு 3:18)

ஏன் இயேசு மரித்தார்? நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்படி அவர் மரித்தார். ஆனால் அவருடைய வேலையில் அது ஒரு நிலை மட்டுமே. இதன் உச்சகட்ட நோக்கம் என்பது, நம்மை தேவனிடம் கொண்டு வருவதுதான்.

நன்றி கர்த்தாவே, இப்பொழுது நான் உம்மிடம் வர முடியும். பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன். இயேசு மரித்ததன் உச்சகட்ட நோக்கம், நம்மை தேவனிடம் கொண்டு வருவதுதான் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். ஆமென்.