ஆகஸ்ட் 11, விடுதலைக்கான ஒரே வழி

பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்பது ஒரு ஜீவ ஆதாரமான ஒரு உண்மை.

அவர் ஒரு நபர் என்பது மட்டுமல்ல. பிதாவாகிய தேவன் கர்த்தராய் இருப்பதுபோல, குமாரனாகிய தேவனும் கர்த்தராய் இருப்பதுபோல, பரிசுத்த ஆவியானவரும் கர்த்தராய் இருக்கிறார்.

தேவனுடைய திரித்துவத்தில் மற்ற இரண்டு நபர்களுக்கு சமமானவராக பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார். எனவே பிதாவாகிய தேவனிடத்திலும், குமாரனாகிய கிறிஸ்துவினிடத்திலும் நமக்கிருக்கிற அதே பயபக்தியின் மனநிலை பரிசுத்த ஆவியானவரிடத்திலும் நமக்கு இருக்க வேண்டும்.

2 கொரிந்தியர் 3:17-ல், பவுல் ஒரு எளிமையான வாக்கியத்தை எழுதுகிறார்: “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.”

இவ்வசனத்தில், நியாயப்பிரமாணம் மற்றும் மதக்கட்டுப்பாடுகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கிற நிலைக்கும், விடுதலைக்கும் இடையே உள்ள தெளிவான வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம். விடுதலைக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. பரிசுத்த ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே விடுதலையுண்டு.

விடுதலையைக் குறித்து வேதாகமத்திற்கு முரண்பட்ட விசித்திரமான எண்ணங்களெல்லாம் பல கிறிஸ்தவர்களுக்கு இருக்கின்றன. “ஞாயிறு ஆராதனையில், நாம் கைகளைத் தட்டி தேவனைப் பாடவில்லை என்றால், நாம் நடனமாடி தேவனைத் துதிக்கவில்லை, நமக்குள் விடுதலை இல்லை,” என்று அவர்கள் சொல்லி விடுகிறார்கள்.

சில பிரசங்கியார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் மேடையில் ஓங்கி, மிதித்து, சத்தமாய் பிரசங்கிக்கவில்லை என்றால், அவர்களுக்குள் விடுதலை இல்லை என்று நினைக்கிறார்கள்.

விடுதலை என்பது சபையின் சில செயல்திட்டங்களைப் பின்பற்றுவதல்ல. கைகளை உயர்த்துவது போன்ற சில காரியங்களைச் செய்வதிலும் விடுதலை இல்லை. அதில் விடுதலை இருக்கலாம்.

ஆனால் அதுவும் அடிமைப்பட்ட நிலைக்குச் சமமாகத்தான் இருக்கிறது. அப்படிச் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்துகிறாரா அல்லது மதப்பாரம்பரியத்தினால் தூண்டப்பட்டவர்களாய் நீங்கள் அதைச் செய்கிறீர்களா என்பதைப் பொறுத்து அது விடுதலையா அல்லது அடிமைத்தனமா என்பது இருக்கிறது.

மதப்பாரம்பரியம் எப்பொழுதுமே அடிமைத்தனத்திற்குள்தான் தள்ளுகிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ எப்பொழுதும் விடுதலைக்கு நேராகத்தான் நடத்துகிறார்.

நன்றி கர்த்தாவே, இப்பொழுது நான் உம்மிடம் வர முடியும். பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன். பரிசுத்த ஆவியானவர் எங்கேயோ அங்கே நிச்சயம் விடுதலை உண்டு என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்.