ஆகஸ்ட் 12, ஒரே ஆவியானவரால் அந்த வழியின் வழியாக நுழையும் உரிமை உண்டாயிருக்கிறது

பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன்

பரிசுத்த ஆவியானவரால் அல்லாமல், தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையும் உரிமை வேறு எதன் மூலமாகவும் நமக்குக் கிடைத்திருக்கவில்லை. காரணம், தேவனுடைய திரித்துவத்தில் ஒரு கோட்பாடு இருக்கிறது.

தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையும் உரிமை ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், பிரதிநிதியாய் அனுப்பப்பட்டவர் கனம் பண்ணப்பட வேண்டும்.

ஆகையால் குமாரனாகிய கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அனுப்பியபோது, அவர் சொன்னார், “இப்பொழுதிலிருந்து குமாரன் என்ற ஒரே வழியாக அல்லாமல், ஒருவரும் என்னிடம் வர முடியாது.

ஒருவரும் என்னுடைய பிரதிநிதியைத் தவிர்த்து விட்டு, மாற்று வழி அல்லது பக்கவாட்டில் வேறு ஏதோ ஒரு வழியின் மூலம் என்னிடம் வர முடியாது. காரணம், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு விஷயத்திலும், நான் யாரை அனுப்பினேனோ, அவரையே உயர்த்தி, கனம் பண்ணுகிறேன்.”

இயேசு இந்தப் பூமியில் தன் வேலையைச் செய்து முடித்து விட்டு, பிதாவாகிய தேவனிடம் திரும்பிச் சென்ற பிறகு, பிதாவும், குமாரனும் சேர்ந்து, பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்கள்.

அதே கோட்பாடுதான் திரும்பவும் இங்கே பொருந்துகிறது. பிதாவிடமும், குமாரனிடமும் சேருவதற்கு, ஆவியானவரைத் தவிர நமக்கு வேறு வழி ஏதும் இல்லை. பிதாவிடமோ அல்லது குமாரனிடமோ வருவதற்கு, நாம் ஆவியானவரைத் தவிர்த்து விட்டு, மாற்று வழியின் மூலம் வர முடியாது.

அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் (யூதர்களும், ஒரே மெய்த்தேவனை அறியாத அந்நியர்களும்) ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசுகிறிஸ்துவின்) மூலமாய் பெற்றிருக்கிறோம். (எபேசியர் 2:18).

பரிசுத்த ஆவியானவரை விட்டு விட்டு, பிதாவினிடத்தில் நாம் சேர முடியாது. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம், தேவனுடைய பிரசன்னத்திற்குள் நாம் நுழைகின்றோம் என்ற உண்மையின் மீது பல கிறிஸ்தவர்கள் கவனமாயிருக்கிறார்கள்.

அது நிச்சயம் உண்மைதான். ஆனால் அது முழு சத்தியமாகாது. குமாரன் வழியாக, ஒரே ஆவியானவராலே பிதாவாகிய தேவனிடத்தில் நாம் சேருகிறோம் என்பதுதான் முழு சத்தியம்.

நாம் தேவனிடத்தில் சென்றாலும் அல்லது தேவன் நம்மிடத்தில் வந்தாலும், இவ்விரண்டிலும், ஆவியானவர் பிரிக்க முடியாத, இன்றியமையாத ஒரு பகுதியாயிருக்கிறார்.

குமாரன் வழியாக, ஆவியானவர் மூலமாக, நாம் தேவனிடத்தில் சேருகின்றோம். கிறிஸ்துவுக்குள் ஆவியானவர் மூலமாய் நாம் வாழும்போது, பிதாவாகிய தேவன் நமக்குள் வாசம் பண்ணுகிறார்.

இந்த விஷயத்தில் நாம் பரிசுத்த ஆவியானவரை விட்டு விட்டோம் என்றால், நாம் தேவனிடத்தில் சேர முடியாது. தேவனும் நம்மிடத்தில் வர முடியாது. நாம் பரிசுத்த ஆவியானவரை முற்றிலும், முழுவதுமாய் சார்ந்திருக்கிறோம்.

நன்றி கர்த்தாவே, இப்பொழுது நான் உம்மிடம் வர முடியும். பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நான் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைகின்றேன். பிதாவிடமும், குமாரனிடமும் வரும்படி, நான் முற்றிலும் பரிசுத்த ஆவியானவரை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்.