ஆகஸ்ட் 13, பரிபூரணம் என்பதன் அர்த்தம் என்ன?

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)

‘பரிபூரணம்’ என்ற வார்த்தை சிலரை பயமுறுத்துகிறது. ‘பரிபூரணம்’ என்றால், நீங்கள் ஒருபோதும் ஒரு தவறும் செய்ய மாட்டீர்கள், நீங்கள் ஒருபோதும் ஒரு தவறான வார்த்தையையும் பேச மாட்டீர்கள், நீங்கள் ஒருபோதும் ஒரு தவறான காரியத்தையும் செய்ய மாட்டீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். “அதுதான் இலக்கு என்றால், இப்பொழுதே நான் விட்டு விடுகிறேன். என்னால் இதை அடைய முடியாது,” என்று சொல்லி, இவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆனால் ‘பரிபூரணம்’ என்ற வார்த்தை வேதவசனத்தில் காணப்படுகிறது. நாம் அதிலிருந்து அப்படியெல்லாம் ஒதுங்கி விட முடியாது. இப்பொழுதோ அல்லது பின்னரோ, நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

‘பரிபூரணம்’ என்ற வார்த்தைக்கு வேதவசனத்தில் மூன்று முக்கிய அர்த்தங்கள் இருக்கின்றன. முதல் அர்த்தம், “பக்குவமடைதல் அல்லது முழுமையாய் வளர்ச்சியடைதல்” என்பதாகும். இதை அடையக்கூடிய ஒரு இலக்காக நாம் எல்லோரும் பார்க்கிறோம்.

இது நமக்கு எவ்வித பயத்தையும் கொடுக்காது. இதோடு தொடர்புடைய இன்னொரு அர்த்தம், “ஒரு குறைவுமற்ற முழுமையான நிலை” என்பதாகும். இந்த இரண்டு அர்த்தங்களும், ஒன்றாய் சேர்ந்தே செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு நபர் முழுமையாய் பக்குவமடைந்து, வளர்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் அவருடைய சரீரத்தின் சில உறுப்புகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஒரு காலோ, ஒரு விரலோ அல்லது ஒரு உறுப்போ அவருடைய சரீரத்தில் இல்லாமல் இருக்கலாம்.

இந்த நிலையில், அவர் பக்குவமடைந்திருக்கிறார், ஆனால் குறைபாடுள்ளவராய் இருக்கிறார். இன்னொரு நபருக்கு அவருடைய சரீரத்தில் எல்லா உறுப்புகளும் ஒரு குறையும் இல்லாமல் இருக்கலாம், இயங்கலாம். ஆனால் அவர் பக்குவமடைந்து, முழுமையாய் வளர்ச்சியடையாதவராக இருக்கலாம்.

பக்குவமடைந்த நிலை மற்றும் ஒரு குறைபாடும் இல்லாத முழுமையான நிலை என்ற இந்த இரண்டையும் பரிபூரணம் என்ற இந்த அளவுகோலைக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

“பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு” என்ற வார்த்தையை எபேசியர் 4:12 பயன்படுத்துகிறது. ‘பரிபூரணம்’ என்ற வார்த்தைக்கான கிரேக்க வினைச்சொல், ‘ஒருசேர ஒன்றாய் இணைத்து, சீர்பொருந்தச் செய்து உருவாக்குதல்” என்பதாகும்.

இதோடு தொடர்புடைய வார்த்தை, எபிரெயர் 11:3-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையினாலே “உலகங்கள் கட்டமைக்கப்பட்டு, ஒன்றாய் இணைத்து உருவாக்கப்பட்டன,” என்று இது சொல்கிறது. ஆகையால் ‘பரிபூரணம்’ என்ற வார்த்தையின் அர்த்தம், பல பாகங்களை ஒருசேர ஒன்றாய் இணைத்து, சீர்பொருந்தச் செய்து ஒன்றை உருவாக்குவதாகும். அதன் மூலம், ஒவ்வொரு பாகமும் மற்றவைகளோடு ஒன்றாய் இசைந்து வேலை செய்ய வேண்டும், தனக்குரிய வேலையை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆக, இவ்வார்த்தைக்கு மூன்று தனித்துவமான அர்த்தங்கள் இருக்கின்றன.

1. பக்குவமடைந்து, முழுமையான வளர்ச்சியை அடைதல். 2. ஒரு குறைபாடும் இல்லாத முழுமையான நிலை. 3. சகலமும் முழுமையாய் ஒன்றிசைந்து வேலை செய்யும்படி, சகலத்தையும் ஒருசேர ஒன்றாய் இணைத்து, சீர்பொருந்தச் செய்தல். இதுதான் விசுவாசிகளாகிய நமக்கு முன் வேதவசனம் வைக்கிற இலக்காயிருக்கிறது.


நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் இருக்கிறேன். தேவன் என்னை பரிபூரணமாக்குகின்றார், என்னைப் பக்குவமடையச் செய்கின்றார், ஒருகுறைபாடும் இல்லாத ஒரு நபராய் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், அவர் எனக்கென்று வைத்திருக்கிற இடத்திற்குள் என்னை சீர்பொருந்தச் செய்து கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். ஆமென்.