தேவனுடைய சித்தத்தைச் செய்தல்

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்


நாம் ஏன் இந்த பூமியில் வாழ்கின்றோம்? நம்முடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல.

மாறாக, கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்டிருக்கிற அவருடைய சித்தத்தைச் செய்யும்படியே நாம் இங்கு வாழ்கின்றோம்.

கொலோசெயர் 1:9-ல், பவுல் எழுதுகிறார், “இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள் முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்.

நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும், அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் வேண்டுதல் செய்கிறோம்.” தேவனுடைய சித்தத்தைக் குறித்த அறிவினால் நாம் நிரப்பப்பட வேண்டும்.

வேறு வார்த்தைகளில், கிறிஸ்துவின் சித்தத்தைக் குறித்த அறிவு, நம்முடைய மனதின் எண்ணங்கள் முழுவதையும் ஆட்கொள்ள வேண்டும்.

அது நம்முடைய சிந்தை முழுவதையும் கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நோக்கமும், நாம் சென்றடைய வேண்டிய இலக்கும், கிறிஸ்துவின் சித்தத்தைக் குறித்த அறிவினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.


பவுல் கொலோசெயர் 4:12-ல் இவ்வாறு எழுதுகிறார், “எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்கிறான். உங்களைச் சேர்ந்தவனும், கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாயும், பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.”


தேவனுடைய சித்தத்தை எவ்வளவாய் ஒரு விசுவாசி நிறைவேற்றுகிறாரோ, அவ்வளவாகத்தான் அவர் பூரணராய், முழுமையானவராய் மாறுகிறார். இந்தச் சத்தியம் எபிரெயர் 13-ல் மிகவும் அழகாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது:


நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறி வரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக.

அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபிரெயர் 13:20-21)


நாம் பூரணராக்கப்பட்டிருக்கிறோம், முழுமையானவர்களாய் இருக்கிறோம். தேவனுடைய சித்தத்தை நாம் எந்த அளவிற்குச் செய்கிறோமோ, அந்த அளவிற்குத்தான் அதன் நிறைவேறுதலுக்குள் நாம் வருகின்றோம்.

இயேசுவும் தம் பூமிக்குரிய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தைச் செய்தபோதுதான், அதன் நிறைவேறுதலைக் கண்டார். அது அப்படியே நமக்கும் பொருந்துகிறது.


உங்களுடைய வாழ்க்கையில் மனச்சோர்வும், குழப்பமும், உணர்வுரீதியான சிறையிருப்பும் காணப்பட்டால், தேவனுடைய சித்தத்தோடு உங்களுடைய உறவு எப்படியிருக்கிறது என்று சீர்தூக்கிப் பாருங்கள்.

தேவனுடைய சித்தத்தை நீங்கள் எவ்வளவாய் அறிந்து, எவ்வளவாய் அதைச் செயல்படுத்துகிறீர்களோ, அவ்வளவாய் மட்டுமே நீங்கள் பரிபூரணராக்கப்படுகிறீர்கள். இல்லையென்றால், உங்களுடைய வாழ்க்கையில் ஒரு நிறைவு இருக்காது. மனச்சோர்வுதான் காணப்படும்.


நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன். தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் ஒரு நிறைவைக் காணும்போது மட்டுமே, என்னால் அவருடைய சித்தத்தை முழுமையாய் நிறைவேற்றி, பூரணனாய் நிற்க முடியும் என்பதுதான் என் நம்பிக்கை. அதையே நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன்.

ஆமென்........................................................