கிறிஸ்துவுக்குள் ஒரு குறைவுமற்றவர்களாய், முழுமையானவர்களாய் இருக்கிறோம்

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்


நான் முன்பு தொழில்ரீதியாக தத்துவவியலாளனாக இருந்தேன். அந்த நிலையில், என் வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இங்கும், அங்கும், எங்கும் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குத் தெரிந்த கிறிஸ்தவத்திலும் நான் அதைத் தேடினேன்.

கிறிஸ்தவத்திலும் அதற்கு பதில் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதில் இல்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிறகு நான் கிரேக்க தத்துவத்திற்குச் சென்றேன், யோகாவிற்குச் சென்றேன்.

எல்லா வகையான காரியங்களையும் நான் நாடிச் சென்றேன். பிறகு 1941-ல், இராணுவ வீரர்கள் தங்கும் அறையில், ஒரு நடுஇரவில், எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு ஒரு நேரடிச் சந்திப்பு எனக்கு உண்டானது. அந்தச் சந்திப்பில் எனக்கு பதில் கிடைத்து விட்டது என்பது தெரிந்தது.


கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, இயேசுகிறிஸ்துவைக் குறித்து பவுல் எழுதியதை நான் வாசித்தேன்: "அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" (கொலோசெயர் 2:3).

அப்பொழுது நான் எனக்குள் இவ்வாறு சொல்லிக் கொண்டேன்: "இயேசுகிறிஸ்துவுக்குள் எல்லாப் பொக்கிஷங்களும் மறைந்திருக்கும்போது, மனுஷனுடைய ஞானத்தினால் நிரம்பி வழிகிற குப்பைத்தொட்டிகளுக்குள் நான் ஏன் தோண்டிக் கொண்டிருக்கிறேன்?" அன்று ஒரு தீர்மானம் எடுத்தேன்.

வேதாகமத்தில் எல்லா பதில்களும் இருக்கின்றன. இயேசுகிறிஸ்துவுக்குள் தேவன் மறைத்து வைத்திருக்கிற இரகசியங்களைக் கண்டுபிடிக்கும்படி நான் உறுதியான ஒரு தீர்மானம் எடுத்தேன்.


சில நேரங்கள், நான் அலைந்து திரிந்திருக்கிறேன். சில நேரங்களில் வழி மாறியிருக்கிறேன், வேறு திசையில் சென்றிருக்கிறேன். ஆனால் இயேசுவே "ஆல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறார்" (வெளிப்படுத்தின விசேஷம் 22:13). அவரே "நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்" (எபிரெயர் 12:2).

நாம் அவருக்குள் ஒரு குறைவும் இல்லாதவர்களாய், முழுமையானவர் களாயிருக்கிறோம். நீங்கள் கிறிஸ்துவுக்கு வெளியே பார்க்க ஆரம்பிப்பீர்கள் என்றால், உங்களுடைய ஆர்வத்தையும், உணர்வுகளையும் தூண்டக்கூடிய எல்லா வகையான கோட்பாடுகளையும் நீங்கள் பார்ப்பீர்கள். பிதாவாகிய தேவனுடைய ஊட்டச்சத்து மிக்க அப்பமே நீங்கள் புசிக்கும்படி கிடைக்கும்போது, நீங்கள் ஏன் ஒரு சத்தும் இல்லாத வெறும் உமியை சாப்பிட வேண்டும்? நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி.  கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறபடியால்,  நான் அவருக்குள் ஒரு குறைவுமில்லாதவனாய், முழுமையானவனாய் இருக்கிறேன். இயேசுவே ஆல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார், அவரே நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறார் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன்.

ஆமென்...........................................................