தேவனுடைய சகல பரிபூரணமும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்


லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும், உலக வழிபாடுகளையும் பற்றினதே அல்லாமல், கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும், அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:8-10).

இதுதான் என் இலக்கு. இயேசுகிறிஸ்துவுக்குள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பரிபூரணத்திற்குள் நுழைவதுதான் அந்த இலக்கு. இயேசுகிறிஸ்துவே நம்முடைய உச்சகட்ட இலக்காகவும், நிறைவாகவும் இருக்கிறார். நாம் இதை பழைய ஏற்பாட்டில் விளக்கிக் காட்டப்பட்டிருக்கிற மோசேயின் ஆசரிப்புக்கூடாரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்து கொள்வோம்.

அதன் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்தது. முதலில், வெளிப்பிரகாரம். பிறகு, முதல் திரைக்குள்  இருக்கிற பரிசுத்த ஸ்தலம். அடுத்ததாக, இரண்டாம் திரைக்குள் இருக்கிற மகா பரிசுத்த ஸ்தலம். இந்த ஒவ்வொரு பிரிவிலும் கிடைக்கின்ற வெளிச்சத்தை வைத்து, இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். 

வெளிப்பிரகாரத்தில், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் மூலம் இயற்கையான வெளிச்சம் கிடைக்கின்றது. பரிசுத்த ஸ்தலத்தில், இயற்கையான வெளிச்சம் எதுவும் இல்லை. ஏழு விளக்குகளைக் கொண்ட குத்துவிளக்குத் தண்டின் மூலம்தான் அங்கு வெளிச்சம் கிடைக்கிறது. அதன் கிண்ணத்திலுள்ள எண்ணெய் எரியூட்டப்பட்டு, வெளிச்சம் கிடைக்கிறது.

பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால், இனி நீங்கள் உங்களுடைய உணர்வுகளால் வாழ முடியாது. விசுவாசத்தினால் மட்டுமே வாழ முடியும். இன்னும் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொன்னால், இரண்டாம் திரைக்குப் பின்னால், வெளிச்சமே இருக்காது. அதற்குள் நுழைவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. தேவனைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அது. ஒரு மனுஷன் உண்மையான இருதயத்தோடு இரண்டாம் திரைக்குப் பின்னால் செல்லும்போது, அந்த இடமே இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட தேவனுடைய ஷெக்கினா எனும் மகிமையான பிரசன்னத்தினால் ஒளியூட்டப்படுகிறது.

இதுதான் உச்சகட்ட இலக்காகும். இரண்டாம் திரைக்குப் பின்னால், தேவனைத் தவிர நம்மைக் கவர்ந்திழுக்கக்கூடிய வேறு எதுவும் இருக்காது. ஒன்று, தேவன் அங்கே இருப்பார். இல்லையென்றால், வேறு யாரும் அங்கே இருக்க மாட்டார்கள், வேறு எதுவும் அங்கே இருக்காது. கவர்ந்திழுக்கக்கூடிய மாற்றான காரியங்கள் எதையும் தேவன் அங்கே வைக்கவில்லை.

தேவன் அங்கே வரவில்லை என்றால், நீங்கள் அங்கே காரிருளில் விடப்படுவீர்கள். தேவனோடு வாழ்வதென்பது நம்முடைய இலக்காய் இருக்கும்போது, வேறு எவ்வகையான கவர்ச்சிகளையும் நாடாமல், தேவனை மட்டுமே நாடித் தேடுகிற ஒரு வாழ்க்கைமுறையாய் அது இருக்கிறது. தேவன்தாமே, தேவன் மட்டுமே அங்கு இருக்கிறார்.

நான் இயற்கையான அல்லது செயற்கையான ஒரு வெளிச்சத்தை நாடித் தேடவில்லை. தேவன்தாமே, தேவன் மட்டுமே பிரசன்னமாகியிருக்கிற இடத்தில் கிடைக்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வெளிச்சத்தை மட்டுமே நான் நாடித் தேடுகிறேன். 

 

நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறபடியால், கிறிஸ்துவுக்குள் வீற்றிருக்கும் தேவனுடைய பரிபூரணத்தையே, தேவனையே, தேவனை மட்டுமே நான் நாடித் தேடுகிறேன் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். 

ஆமென்...............................................