ஒரே பலியினாலே பரிபூரணர்களாக்கப்பட்டிருக்கிறோம்

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்


ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். (எபிரெயர் 10:14)


இந்த வசனத்தில் இரண்டு வினைச்சொற்கள் இருக்கின்றன. இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. முதல் வினைச்சொல், முழுமையாய், பூரணமாய் செய்து முடிக்கப்பட்டிருக்கிற ஒன்றைக் குறிக்கும் வினைச்சொல்லாகும்: “ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.”

இந்தத் தியாகபலி, பரிபூரணமாய், முழுமையாய், ஒரு குறைவுமில்லாமல் செலுத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் சொல்ல முடியும். இதற்கு முந்திய வசனத்தில், பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள், ஒருபோதும் பாவத்தை நிவிர்த்தி செய்யாத ஒரே விதமான பலிகளைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு நாளும் செலுத்திக் கொண்டே, நின்று கொண்டிருந்தார்கள் என்று எபிரெய நிருப ஆசிரியர் சொல்கிறார். பிறகு அவர் இயேசுவைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார்,

“இவரோ (இயேசுவோ) பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்” (எபிரெயர் 10:12). நின்று கொண்டே பலிகளைச் செலுத்திக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களுக்கும், தன் பலியைச் செலுத்தி விட்டு, உட்கார்ந்த இயேசுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். ஏன் இயேசு உட்கார்ந்தார்?

காரணம், அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முழுமையாய் செய்து முடித்து விட்டார். இனி அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களின் வேலை அங்கே முடியவே இல்லை. காரணம், அவர்கள் செலுத்திய பலிகள், உண்மையான பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதுமானவைகளாய் இல்லை. சிலுவையில் நிகழ்ந்த இயேசுவின் மரணம், முழுமையான, கடைசி பலியாய் இருந்தது.


சிலுவையில் இயேசு என்ன செய்து முடித்தாரோ, அது முழுமையானது, பூரணமானது. அதோடு ஒன்றையும் கூட்டக்கூடாது. அதிலிருந்து ஒன்றையும் எடுத்து விடக்கூடாது. சிலுவையில் இயேசு தன்னையே தியாகமாய் செலுத்திய பலி, என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடியதாய் இருக்கிறது. இதுதான் பூரணமாய் முடிக்கப்பட்டிருக்கிற ஒன்றைக் குறிக்கும் வினைச்சொல்லாகும்.


இயேசுவின் தியாகபலியினால் பூரணமாக்கப்பட்டிருக்கிறவர்களைக் குறித்துப் பேசும்போது, எபிரெய நிருப ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் (கிறிஸ்து) என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” (எபிரெயர் 10:14).

“பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்” என்று சொல்லும்போது, அது தொடர்ச்சியாய்  நடக்கின்ற நிகழ்கால வினைச்சொல்லாய் இருக்கிறது. இயேசு என்ன செய்து முடித்திருக்கிறாரோ, அது பூரணமாய், ஒரு குறைவுமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருக்கிற ஒன்றாகும். நமக்குள் நடக்கின்ற கிரியை, தொடர்ச்சியாய் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற ஒன்றாகும்.

நாம் பரிசுத்தமாக்கப்படுகின்றபோது, நாம் இன்னும் இன்னும் அதிகமாய் தேவனுக்கென்று வேறுபிரிக்கப்படுகின்றபோது, நாம் தேவனை இன்னும் நெருக்கமாய் கிட்டிச் சேருகின்றபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும் அதிகமாய் நாம் பெற்றுக் கொள்கின்றபோது, இயேசுவின் தியாக பலியினால் உண்டான எல்லா நன்மைகளுக்குள்ளும் நாம் இன்னும் இன்னும் அதிகமாய் நுழைகின்றோம். 

நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்.  பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே கிறிஸ்து என்றென்றைக்குமாய் பூரணப்படுத்தியிருக்கிறார், நானும் அவர்களில்
ஒருவன் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.

ஆமென்.................................................................