பரிபூரண வட்டங்கள்

கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்

நான் முன்பே சொன்னதுபோல, பரிபூரணம் என்ற வார்த்தை ஜனங்களை அச்சுறுத்துகிறது. குறைவாக அச்சுறுத்தக்கூடிய ஒரு வார்த்தையாக இதை ஆக்கும்படி, கணிதத்திலிருந்து ஒரு எளிமையான எடுத்துக்காட்டை நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

வட்டம் என்ற வார்த்தையை நாம் எடுத்துக் கொள்வோம். வட்டத்திற்கு ஒரே ஒரு நிலையான அளவுகோல் உண்டு. ஒன்று, அது வட்டமாக இருக்க வேண்டும் அல்லது வட்டமாக இல்லாத ஒன்றாக அது இருக்க வேண்டும். 

ஒன்று வட்டமாக இருக்குமென்றால், அது வட்டம், அவ்வளவுதான். ஒரே ஒரு வகையான வட்டம்தான் இங்கு இருக்க முடியும். மூன்று, நான்கு வகையான வட்டங்களெல்லாம் இங்கு இருக்க முடியாது.

ஆனால் பல வித்தியாசமான அளவுகளில் வட்டங்கள் இருக்க முடியும். இரண்டு பொருட்கள் ஒரே வடிவத்திலும், ஆனால் வித்தியாசமான அளவுகளிலும் இருக்குமென்றால், அவை “ஒத்த வடிவமுடைய பொருட்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

பிதாவாகிய தேவன் மிகப் பெரிய வட்டமாயிருக்கிறார். அவர் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய, எதினாலும் அளவிட முடியாத அளவிற்கு மிகப் பெரிய ஒரு வட்டமாயிருக்கிறார்.

தேவனைப் போலவே அதே அளவு நம்மிடமும் இருக்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேவனைப் போன்ற குணாதிசியம் நம்மிடம் வெளிப்பட வேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

தேவனைப் போன்று அதே அளவில் அல்ல, அவருக்கு ஒத்த விதத்தில் நாம் வாழ வேண்டும். நீங்களும், நானும் சிறிய, மிகச் சிறிய வட்டங்களாக இருக்கலாம். தேவன் நம்மை வைத்திருக்கிற சிறிய பகுதிகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

அங்கு நாம் செய்கின்ற பணி, அற்பமானதாக இருக்கலாம். அது ஆர்வத்தையும், உற்சாகத்தையும் நமக்குக் கொடுக்காத ஒன்றாக இருக்கலாம். ஆனால் நாம் ஒவ்வொருவரும்,

நாம் இருக்கின்ற அந்தச் சிறியப் பகுதிகளில், பூரணமான ஒரு வட்டமாக இருக்க வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய பிதாவாகிய தேவன் என்ற “மிகப் பெரிய வட்டத்திற்கு” ஒத்த வட்டமாக நாம் இருக்க வேண்டும்.

ஆகையால் “பூரண சற்குணராய் இருக்கக்கடவீர்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளையை (மத்தேயு 5:48) நீங்கள் வாசிக்கும்போது, அதை ஒரு “வட்டம்” என்ற அர்த்தத்தில் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு பக்கம் மேடாய், இன்னொரு பக்கம் பள்ளமாய் என ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்காதீர்கள். குறைபாடுகளுடன் வாழாதீர்கள். நீங்கள் ஒரு பெரிய வட்டமாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு பூரண வட்டமாய் இருக்க முடியும்.

நன்றி கர்த்தாவே, எனக்குள் நீர் செய்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணனாய் ஆக்கப்பட்டிருக்கிறபடியால், தேவன் என்னிடத்தில் விரும்புகிறபடியே, அவருடைய கிருபையினால், நான் ஒரு பூரண வட்டமாய் வாழ முடியும் என்று விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். 

ஆமென்..............................................