ஆகஸ்ட் 20, புதிய மனுஷன் வாழ்கின்றான்

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி, நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும், அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர் 3:9-10)

பழைய மனுஷனின் நிலை என்ன, புதிய மனுஷனின் நிலை என்ன என்பதைக் குறித்து நாம் இங்கு பேசப் போகின்றோம். பழைய மனுஷன், சிலுவையில் கிறிஸ்துவுக்குள் மரித்திருக்கிறான்.

இந்தப் பரிமாற்றத்தின் விளைவாக, இப்பொழுது புதிய மனுஷன் நமக்குள் ஜீவிக்க முடியும். இதுதான் புதிய ஏற்பாட்டின் கருப்பொருளாயிருக்கிறது. ஆனால் இன்றைக்கு பல சபைகளில் இது மிகவும் அரிதாகத்தான் பேசப்படுகிறது.

சிலுவையில் மரித்த பழைய மனுஷனுக்கும், கிறிஸ்துவோடு உயிரோடு எழுப்பப்பட்ட புதிய மனுஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலமாக வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு, ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். அது உண்மையில் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்தது. இதை நாம் இவ்விதத்தில் பார்க்கும்போது, இது நம் விசுவாசத்தை நன்றாக உறுதிப்படுத்தி, வலுப்படுத்துகிறது.

இது உண்மையிலேயே நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். இதை நாம் விசுவாசித்தாலும், விசுவாசிக்கா விட்டாலும், இது உண்மைதான். இதை நாம் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும், இது உண்மைதான்.

ஆனால் நாம் இதை அறிந்து, இதை விசுவாசிக்கும்போது, இது நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது. ரோமர் 6:6-ல், பவுல் எழுதுகிறார், “நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.”

கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, “பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக,” என்று சொல்கிறது. ஆனால் நான் அதை இவ்வாறு சொல்ல விரும்புகிறேன்,

“நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் செயல்திறனற்று, பயனற்று, பலனற்றுப் போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.”

பழைய மனுஷன் மரித்து விட்டான், இப்பொழுது புதிய மனுஷன் நமக்குள் வாழ்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, பாவம் நம்முடைய எஜமானாய் இருந்து அடிமைப்படுத்துகிற நிலைக்கு நம் வாழ்க்கையில் முடிவு கட்டியாயிற்று.

ஆனால் நாம் இதைப் புரிந்து கொள்ளாமல், விசுவாசிக்காமல், அதன்படி செயல்படாமல் இருந்தால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவதற்கு வழியே இல்லாது போய் விடும். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவதற்கு இந்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி. என்னுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரித்து, இப்பொழுது எனக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கிறபடியால், இனி பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிற நிலை என் வாழ்க்கையில் இல்லை என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்.