சத்தியத்தினால் உண்டானவன்

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி, நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்


ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும், அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர் 3:9-10)


பழைய மனுஷனுக்கும், புதிய மனுஷனுக்கும் இடையே நிகழ்ந்த பரிமாற்றத்தைக் குறித்து இன்னும் கொஞ்சம் அதிகமாய் பார்ப்போம். பழைய மனுஷன் சாத்தானுடைய பொய்களினால் உண்டானவன். அவன் வஞ்சத்தினால் உருவாக்கப்பட்டவன். அவனுடைய சுபாவம் முழுவதுமே வஞ்சகத்தினாலும், எல்லா வகையான சீர்கேடுகளினாலும் நிறைந்திருக்கிறது.

அவன் பாம்பின் விஷத்தினால் உண்டாக்கப்பட்டவன். பழைய மனுஷன், பாம்பைப்போல சூழ்ச்சிகளும், தந்திரங்களும் நிறைந்தவன். அவனுக்குள் சத்தியம் என்பதே இல்லை. வஞ்சகமும், சூழ்ச்சிகளும் அவனுக்குள் ஆழமாய் வேரூன்றியிருக்கிறது. அவன் நேராக மாறும்படி அதிகதிகமாய் முயற்சிக்க, முயற்சிக்க, அவன் இன்னும் அதிக சூழ்ச்சிகளும், தந்திரமும் நிறைந்தவனாய் மாறுகிறான்.


இதற்கு தீர்வு என்ன? புதிய மனுஷன் முன்னே வரும்படி, பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட வேண்டும். “பழைய மனுஷனைக் களைந்து போடுங்கள்,” என்று எபேசியர் 4:22 நமக்கு கட்டளை கொடுக்கிறது. “புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்,” என்று 24-ம் வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இதுதான் பரிமாற்றம். பழைய உடை, களைந்தெறியப்படுகிறது. புதிய உடை, அணியப்படுகிறது. 


“மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும்” புதிய மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்று எபேசியர் 4:24 சொல்கிறது. நான் இவ்வசனத்தை இவ்வாறு திரும்பச் சொல்ல விரும்புகிறேன், “தேவனுடைய சாயலாக, மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் புதிய மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்.”

நீங்கள் இதை இன்னும் விளக்கமாக இவ்வாறு சொல்லலாம், “தேவனுடைய திட்டத்தின்படி, தேவனுடைய அளவுகோல்களின்படி, தேவனுடைய சிந்தையின்படி, தேவனுடைய நோக்கத்தின்படி (நீங்கள் இதைப் புரிந்து கொள்கிற விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்), அவன் மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்.” புதிய மனுஷன், இயேசுகிறிஸ்துவைக் குறித்த தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தினால் உருவாக்கப்பட்டவன்.

இந்தச் சத்தியம், விசுவாசத்தினால், நம்முடைய இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது புதிய மனுஷனை, நீதியிலும், பரிசுத்தத்திலும் சிருஷ்டிக்கப்பட்டவனாய் வெளியே கொண்டு வருகிறது. புதிய மனுஷன், தேவனுடைய அளவுகோல்கள் அல்லது நோக்கத்தின்படி, நீதியிலும், பரிசுத்தத்திலும் சிருஷ்டிக்கப்பட்டான். அவன் சத்திய வார்த்தையினால் உருவாக்கப்பட்டவன்.  


நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி.  என்னுடைய “பழைய மனுஷன்” கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டான், இப்பொழுது புதிய மனுஷனை எனக்குள் ஜீவிக்கின்றான் என்ற சத்தியத்தை, நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். இந்த சத்தியத்தை விசுவாசத்தோடு என் இருதயத்தில் ஏற்றுக் கொள்கிறேன். புதிய மனுஷன் எனக்குள் ஜீவிக்கும்படி, பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்.

ஆமென்.................................................................................