புதுப்பிக்கப்படுகின்ற கிரியை

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி, நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்


தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்ய மாட்டான். (1 யோவான் 3:9)


இயேசு மாம்சத்திற்குள் மறைந்திருந்த தேவனாயிருந்தார். இயேசுவின் மாம்சம் சிலுவையில் குத்தி ஊடுருவப்பட்டு, கிழிக்கப்பட்டபோது, திரை இரண்டாகக் கிழிந்தது.


இப்பொழுது கிறிஸ்து விசுவாசியின் மூலமாக வெளிப்படுகிறார். அவர் விசுவாசிக்குள் வாழ்கின்றார். ஆனாலும் அவர் இப்பொழுதும் மாம்சத்திற்குள்தான் மறைந்திருக்கிறார்.

கொலோசெயர் நிருபம் இந்த சத்தியத்தின் இன்னொரு அழகான அம்சத்தை நமக்குக் காண்பிக்கிறது. புத்தம் புதிய இனத்தார்களாய், கிறிஸ்துவுக்குள் புதிய மனுஷர்களாய் வாழ்கின்ற நம்மைக் குறித்துப் பேசும்போது, பவுல் விசுவாசிகளாகிய நமக்கு அதில் இவ்வாறு எழுதினார்.


ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும், அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கு ஒப்பாய், பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர் 3:9-10).


இதை இன்னும் அர்த்தமுள்ளதாக வெளிக்கொண்டு வர விரும்புகிறேன்: “புதிதாக்கப்படுகின்ற” என்ற அர்த்தத்தில்தான் இது வருகின்றது. புதிதாக்கப்படுதல் என்பது தொடர்ச்சியாய் இப்பொழுது நிகழ்கின்ற ஒரு கிரியையாகும். புதிதாக்கப்படும்படி, நாம் ஒரு கிரியையின் வழியாகக் கடந்து செல்கின்றோம்.


பிறகு, “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கு ஒப்பாய்,” என்று இது சொல்கிறது. இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இயேசுவை ஏதோ அறிவுப்பூர்வமாக அறிந்து வைத்திருப்பதைக் குறித்து இது பேசவில்லை.

இது இயேசுவை நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் அவரை இரட்சகராக, ஆண்டவராக ஏற்று, அங்கீகரித்து வாழ்கின்ற ஒரு வாழ்க்கைமுறையைக் குறித்துப் பேசுகிறது. இது அவருடைய சாயலை நமக்குள் கொண்டு வருகின்றது. 

 

புதிதாக்கப்படுகின்ற கிரியையின் இறுதி நோக்கம், அவருடைய சாயலை நமக்குள் உருவாக்குவதுதான். இதுதான் மிகச் சரியான, நியாயமான விளக்கம் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை நாம் திரும்பச் சொல்வோம்: “சிருஷ்டிகராகிய தேவனின் சாயலை நமக்குள் உருவாக்கும்படி, அவரை நம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக் கொள்வதன் மூலம், நாம் புதிதாக்கப்படுகின்றோம்.”

வேறு வார்த்தைகளில் சொன்னால், விழுகையினால் அழிந்துபோன சாயலை திரும்ப மீட்டெடுப்பதுதான் இறுதியான நோக்கமாகும். இந்த நோக்கத்தின் நிறைவேறுதல், உயிர்த்தெழுதலில் நடக்கும். அப்பொழுது கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு ஒப்பாக, விசுவாசியினுடைய சரீரம் உருமாற்றப்படும்.   
 


நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி. என்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கு ஒப்பாக, நான் புதிதாக்கப்படுகின்றேன் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். புதிய மனுஷன் எனக்குள் ஜீவிக்கும்படி, என்னுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான் என்றும் நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.

ஆமென்.....................................................................................