ஆகஸ்ட் 24, ஆவிக்குரிய ஊட்டச்சத்து

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி, நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்

தேவனுடைய வார்த்தையினால் உண்டாகக்கூடிய புதுப் பிறப்பு, நம் ஆவிக்குள் முற்றிலும் புதிய ஒரு சுபாவத்தை, ஒரு புதிய ரகமான ஜீவனை, வாழ்க்கையை உண்டாக்குகிறது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.

தேவனுடைய வார்த்தை உருவாக்கக்கூடிய அடுத்த மிக முக்கியமான ஒரு விளைவைக் குறித்து நாம் கற்றுக் கொள்ளும்படி இது நம்மை நடத்துகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் ஒரு மாறாத பிரமாணம் இருக்கிறது. ஒரு புதிய ஜீவன் பிறந்தவுடன், அந்தப் புதிய ஜீவனுக்குத் தேவைப்படும் முதல் மற்றும் மிக முக்கியமான ஒரு தேவை, அதற்கு பெலன் கொடுக்கத் தேவையான ஊட்டச்சத்துதான்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு குழந்தை பிறக்கும்போது, எல்லா விஷயத்திலும் அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு, ஒரு குறைவுமில்லாமல் இருக்கலாம். ஆனால் சீக்கிரமாய் அதற்குத் தேவையான ஊட்டச்சத்தை அந்தக் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், அது நலிந்து, மடிந்து விடும்.

ஆவிக்குரிய தளத்திலும் இந்தப் பிரமாணம் உண்மையாய் இருக்கிறது. ஒரு நபர் இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறக்கும்போது, அந்த நபருக்குள் ஒரு புதிய ஆவிக்குரிய சுபாவம் உண்டாகிறது.

ஆவிக்குரிய ஜீவனைத் தக்க வைத்துக் காத்துக் கொள்ளும்படி, ஆவிக்குரிய வளர்ச்சியை அடையும்படி, அதற்கு உடனடியாய் ஆவிக்குரிய ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தேவன் தம்முடைய மறுபடியும் பிறந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை தம்முடைய வார்த்தையில் வைத்திருக்கிறார்.

தேவனுடைய வார்த்தையில் அவ்வளவு மிகுதியான ஊட்டச்செறிவு இருக்கிறது. ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான ஊட்டச்சத்து அதில் இருக்கிறது.

ஆவிக்குரிய வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் குறித்து பேதுரு எழுதிய முதல் நிருபத்தில் தேவன் விளக்கமாகப் பேசுகிறார். தேவனுடைய வார்த்தை எனும் அழியாத வித்தினாலே மறுபடியும் பிறந்ததைக் குறித்து முதல் அதிகாரத்தில் அவர் பேசுகிறார்.

பிறகு அவர் தொடர்ந்து 2-ம் அதிகாரத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “இப்படியிருக்க, கர்த்தர் தயை உள்ளவரென்பதை நீங்கள் ருசி பார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்து விட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:1-3).

கிறிஸ்துவுக்குள் புதிதாய்ப் பிறந்த ஆவிக்குரிய குழந்தைகளுக்கு, தேவன் ஆயத்தம் செய்திருக்கிற ஊட்டச்சத்து, அவருடைய வார்த்தையாகிய களங்கமில்லாத சுத்தமான பாலில்தான் இருக்கிறது. இந்தப் பால், தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், ஜீவனுக்கும் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவாயிருக்கிறது.

நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி. என்னுடைய ஜீவனுக்கும், தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் தேவையான ஆவிக்குரிய ஊட்டச்சத்தை தேவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக் கொள்ளும்படி நான் என்னை அர்ப்பணிக்கிறேன். புதிய மனுஷன் எனக்குள் ஜீவிக்கும்படி, என்னுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்.