புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி,  நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்


மதமானது எப்பொழுதுமே மனுஷனை வெளியே இருந்து உள்ளே மாற்றும்படி முயற்சிக்கிறது. உடைகளை பாதம் வரை நீளமாகவும், தளர்வாகவும் அணியச் செய்கிறது. தலையில் எதையாவது போட்டுக் கொள்ளும்படி செய்கிறது, முக ஒப்பனை செய்யக்கூடாது என்று சொல்கிறது, உடையின் கைப்பகுதிகளை நீளமாக அணியச் செய்கிறது.

தலைமுடியை குறைக்கச் செய்கிறது. இன்னும் இது போன்ற நிறைய விஷயங்களை இது வலியுறுத்துகிறது, நிர்ப்பந்திக்கிறது. ஆனால் தேவனோ அப்படியே நேரதிராகத்தான் எப்பொழுதும் செயல்படுகிறார். அவர் மனுஷனை அவனுக்கு உள்ளேயிருந்து வெளியே மாற்றுகிறார். நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதிலிருந்து தேவன் ஆரம்பிக்கிறார்.

அவர் சொல்கிறார், “ஒரு நல்ல, பிரயோஜனமான மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்றால், நீ சிந்திக்கிற விதத்தை மாற்ற வேண்டும். வேறு விதத்தில், நீ சிந்திக்க வேண்டும். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய மனதிற்குள் நுழைந்து, கிரியை செய்ய வேண்டும். 

இதுவரை நீ இன்னொரு ஆவியாகிய சாத்தானுடைய வஞ்சகத்தின் கீழ் கட்டுண்டு கிடந்தாய். இப்பொழுது நீ சத்தியத்தின் ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உன்னுடைய இருதயத்தை திறந்து விட வேண்டும்.”

இப்படிச் செய்வதன் மூலம், நாம் பழைய மனுஷனுக்கு அப்படியே நேரெதிரானவனாகிய புதிய மனுஷனைத் தரித்துக் கொள்கிறோம்.

எபேசியர் 4:24 சொல்கிறது, “மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.” இந்தப் புதிய மனுஷன், தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்டவன்.

இவன் மெய்யான நீதியிலும், மெய்யான பரிசுத்தத்திலும் சிருஷ்டிக்கப்பட்டவன். இவன் தேவனுடைய திட்டத்தின்படி உண்டாக்கப்பட்டவன். இவன் தேவனுடைய நோக்கம், தேவனுடைய மாதிரி மற்றும் அளவின்படி உண்டாக்கப்பட்டிருக்கிறான்.

பழைய மனுஷன், சாத்தானுடைய வஞ்சகத்தினால் உருவாக்கப்பட்டவன். புதிய மனுஷன், தேவனுடைய சத்திய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவன்.

சாத்தான் ஒரு பாம்பின் உருவில்தான் மனுஷனிடம் வந்தான். இதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பாம்பின் சுபாவமே, சூழ்ச்சியும், தந்திரமும் உடையதாயிருப்பதுதான்.

இது பிசாசை அப்பட்டமாக வெளியே எடுத்துக் காண்பிக்கிற ஒரு படமாகும். பிசாசும் நயவஞ்சகமானவன், சூழ்ச்சியும், தந்திரமும் நிறைந்தவன். அவன் ஒருபோதும் சத்தியத்தைப் பேச மாட்டான்.

பழைய மனுஷனை தனித்துவமாக வித்தியாசப்படுத்தி வருணித்துக் காண்பிக்கிற ஒரு வார்த்தை, அவன் ‘ எல்லாவிதத்திலும் சீர்கெட்டவன்’ என்பதுதான்.

நாம் பழைய மனுஷனைக் களைந்து போட்டு விட்டு, புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ள வேண்டும். புதிய மனுஷனை தனித்துவமாக வித்தியாசப்படுத்தி, வருணிக்கிற வார்த்தை, அவன் ‘மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் சிருஷ்டிக்கப்பட்டவன்’ என்பதுதான்.  

நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி. புதிய மனுஷன் எனக்குள் ஜீவிக்கும்படி, என்னுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறபடியால், நான் பழைய மனுஷனைக் களைந்துபோட்டு விட்டு, புதிய மனுஷனைத் தரித்துக் கொள்கிறேன் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறேன்.

ஆமென்......................................................................................