சுபாவத்திற்கேற்ற கனி

இப்பொழுது நமக்குள் புதிய மனுஷன் ஜீவிக்கும்படி, நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்


கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் காணப்படும் முரண்பாடுகளைக் குறித்து யாக்கோபு எழுதியிருக்கிறார்:


“அதினாலே (நம் நாவினாலே) நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது.

என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச் செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்று தித்திப்பான ஜலத்தைக் கொடுக்க மாட்டாது.” (யாக்கோபு 3:9-12).


யாக்கோபு இங்கே இரண்டு படங்களை ஒன்றாக இணைத்துப் பேசுகிறார். ஒன்று, மரமாகும். அத்திமரம் ஒருபோதும் ஒலிவப் பழங்களைக் கொடுக்காது என்று அவர் சொல்கிறார்.

ஒவ்வொரு வகையான மரமும் அதற்குரிய வகையான கனியைத்தான் கொடுக்கும். இந்தப் படத்தில், மரம் என்பது இருதயத்தைக் குறிக்கிறது. கனி என்பது நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் குறிக்கின்றது.

இங்கே யாக்கோபு பயன்படுத்துகிற இரண்டாவது படம், நீரூற்றாகும். ஒரு நீரூற்றிலிருந்து உவர்ப்பான உப்புத் தண்ணீர் வருகிறது என்றால், அந்த நீரூற்றின் தண்ணீரே உப்புத் தண்ணீராகத்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 


இரண்டு மரங்கள், இரண்டு வகையான சுபாவங்களைக் குறிக்கின்றன. ஒரு மரம், அது உருவாக்க வேண்டிய கனியிலிருந்து வித்தியாசமான ஒரு கனியை உருவாக்குகிறது என்றால், அது சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். இவ்வகையான மரம் பழைய மனுஷனைக் குறிக்கிறது.

ஒரு நல்ல மரம், இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைக் குறிக்கிறது. பழைய மனுஷனால் நல்ல கனியைக் கொடுக்க முடியாது. இயேசு இதை பல முறை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் (எடுத்துக்காட்டிற்கு, யோவான் 15:1-8 வசனங்களை வாசித்துப் பாருங்கள்).

பழைய, மாம்சீகமான சுபாவத்திலிருந்து, அந்த சுபாவத்திற்கேற்ற கனிதான் வெளிப்படும்.


இங்கு நீரூற்று என்பது ஆவிக்குரிய ஒன்றைக் குறிக்கிறது. சுத்தமான நீரூற்று, பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. சீர்கேடான, அசுத்தமான, உப்புத்தன்மையுள்ள நீரூற்று, இன்னொரு ஆவியாகிய பிசாசைக் குறிக்கிறது.      


 
நன்றி கர்த்தாவே, சிலுவையில் நிகழ்ந்த பரிமாற்றத்திற்காக, இயேசுவே உமக்கு நன்றி. புதிய மனுஷன் எனக்குள் ஜீவிக்கும்படி, என்னுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறபடியால், என்னுடைய புதிய சுபாவத்திலிருந்து நல்ல கனிகளே வெளிப்படும் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.

ஆமென்...........................................................................................