ஆகஸ்ட் 31, ஊதாரித்தனமாய் தன் வாழ்க்கையை வீணடித்த மகனைக் கட்டித் தழுவி ஏற்றுக் கொள்கிற தேவன்

அன்பினாலே என் பிதாவாகிய தேவன் என்னை அவருடைய மகனாய், மகளாய் ஏற்றுக் கொண்டிருக்கிறார்

ஊதாரி மகன் உவமையில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிற ஒரு மைய சத்தியத்தை நாம் மறு ஆய்வு செய்வோம். லூக்கா 15:11-32 வசனங்களில், இயேசு இந்த உவமையை தன் சீஷர்களிடம் சொல்கிறார்.

தன்னுடைய மகன் வீடு திரும்ப மாட்டானா என்ற எதிர்பார்ப்புடனும், ஏக்கத்துடனும் அந்தத் தகப்பன் காத்திருந்தான். “உன்னுடைய மகன் வீடு திரும்பி விட்டான்,” என்று மற்றவர்கள் அவனிடம் வந்து சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

காரணம், அதை அறிந்த முதல் நபரே, அந்தத் தகப்பன்தான். அவனுடைய குடும்பத்திலிருந்த மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னே, அந்தத் தகப்பன் அதை முதலில் அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவுக்குள் நம்மைக் குறித்த தேவனுடைய அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கிறது. நாம் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல.

நாம் வேலையாட்கள் அல்ல. ஊதாரி மகன் திரும்பி வந்தபோது, ஒரு வேலைக்காரனாக இருக்கலாம் என்ற மனநிலையில்தான் அவன் வந்தான். ஆனால் அவனுடைய தகப்பன் அதற்கு தன் செவியைச் சாய்க்கவே இல்லை. மாறாக, அந்தத் தகப்பன் இவ்வாறு சொன்னான்:

“நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை (ஆடையை) கொண்டு வந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்.

நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமல் போனான், திரும்பவும் காணப்பட்டான்.” (22-24 வசனங்கள்).

ஊதாரி மகனை வரவேற்று, தழுவி ஏற்றுக் கொள்ளும்படி, அந்த வீடே தலைகீழாய் மாறியது.

இயேசு இவ்வாறு சொன்னார், “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.” (7-ம் வசனம்).

தேவனும் நம்மை கிறிஸ்துவுக்குள் இவ்வாறாகத்தான் கட்டித் தழுவி, ஏற்றுக் கொள்கிறார்.

  

பிதாவாகிய தேவனே, உம்முடைய பிள்ளையாய் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறீர். உமக்கு நன்றி. தேவன் என்னை கிறிஸ்துவுக்குள் கட்டித் தழுவி ஏற்றுக் கொள்கிறார், நான் இரட்சிப்புக்குள் வந்ததை நினைத்து, அவர் களிகூருகிறார் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். அன்பினாலே என் பிதாவாகிய தேவன் என்னை அவருடைய மகனாய், மகளாய் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆமென்.