டிசம்பர் 3, ஓட்டத்தை வெற்றியாய் முடிக்கக்கடவோம்

 

நம்முடைய ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம் 

எபிரெய நிருபத்தில், பல எச்சரிக்கைகளும், கட்டளைகளும் (‘LET US’ instructions) நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்பதாவது எச்சரிக்கை (கட்டளை), எபிரெயர் 12:1-ம் வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்:

ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு, (நம்) விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

ஆங்கில மொழிபெயர்ப்புகளில், இந்த ஒரு வசனத்தில், இரண்டு எச்சரிக்கைகள் நமக்கு கட்டளைகளாக (‘LET US’ instructions)  கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, “பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் நாம் தள்ளி விடக்கடவோம்” என்றும், “நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்,” என்றும், ஆங்கிலத்தில் இரண்டு கட்டளைகளாக எழுதப்பட்டிருக்கிறது.

இது மிகச் சரியான மொழிபெயர்ப்புதான். ஆனால் கிரேக்க மூல மொழியில், முதல் பகுதியில், “பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் நாம் தள்ளி விடக்கடவோம்,” என்ற அர்த்தத்தில் எழுதப்படவில்லை.

மாறாக, அது ஒரு வினையெச்சமாக (PARTICIPLE) எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, “பாரமான யாவற்றையும் ஒதுக்கி வைத்தவர்களாய், நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்,” என்றுதான் கிரேக்க மூல மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆகையால், “நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்,” என்ற பகுதிதான் இங்கு நமக்கு முக்கியமான எச்சரிக்கையாக இருக்கிறது. நாம் இதன் மீது கவனம் செலுத்துவோம்.

புதிய ஏற்பாட்டின் இந்தப் பகுதியிலும், இன்னும் மற்ற பகுதிகளிலும், கிறிஸ்தவ ஜீவியம், ஒரு ஓட்டப்பந்தயத்தோடு ஒப்பிடப்பட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இது முன்கூட்டியே தனிப்பட்ட விதத்தில், நமக்காக நியமிக்கப்பட்ட ஒரு ஓட்டமாக இருக்கிறது.

இந்த ஓட்டப்பந்தயத்தின் விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி, இந்த ஓட்டத்தை நிறைவு செய்வதில்தான், கிறிஸ்தவ ஜீவியத்தின் வெற்றி இருக்கிறது.

ஆக, நமக்கு முன்பாக ஒரு ஓட்டம் நியமிக்கப்பட்டிருக்கிறது என்ற சத்தியத்தின் வெளிச்சத்தை நாம் பெற்றுக் கொண்டோம். இப்பொழுது அந்த ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடிக்கும்படி, நாம் நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும்.

இந்த நான்கு நிபந்தனைகளும் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது: (1) சரியான சிந்தை (2) சுயக்கட்டுப்பாடு (3) நீடிய பொறுமை (4) நம் கண்களை நிலையாய் இயேசுவின் மீது பதித்திருக்க வேண்டும்.

நாம் இந்த நிபந்தனைகளையெல்லாம் நம் மனதில் நிலைநிறுத்தி, இவற்றை ஒழுங்காகப் பின்பற்றுவோம் என்றால், நம்மால் இந்த ஓட்டத்தை வெற்றியாய் ஓடி முடிக்க முடியும். நம் விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும் முடியும்.    

கர்த்தாவே, நான் தொடர்ந்து ஓடும்படி நீர் எனக்கு உதவி செய்கிறீர். உமக்கு நன்றி. நான் சரியான சிந்தையை காத்துக் கொள்வேன், சுயக்கட்டுப்பாட்டை பயிற்றுவித்துக் கொள்வேன், நீடிய பொறுமையைக் காண்பிப்பேன், என் கண்களை, கவனத்தை இயேசுவின் மீது நிலையாய் பதித்திருப்பேன் என்று அறிக்கை செய்கிறேன். இவற்றைச் செய்வதன் மூலம், நான் இந்த ஓட்டத்தை வெற்றியாய் முடிப்பேன், என் விசுவாசத்தைக் காத்துக் கொள்வேன். நான் நீடிய பொறுமையோடு இந்த ஓட்டத்தை ஓடுவேன். ஆமென்.