டிசம்பர் 13, நன்றி சொல்வது, விடுதலையைக் கொண்டு வருகிறது

தேவனிடத்தில் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்தக்கடவோம்

நன்றியுணர்வு அல்லது நன்றி சொல்லுதல் என்பது, தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார், இப்பொழுதும் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு நாம் காண்பிக்கும் மிகப் பொருத்தமான ஒரு எதிர்வினையாக, மறுமொழியாக இருக்கிறது.

இதைச் செய்ய வேண்டிய விஷயத்தில், நாம் தேவனுக்குக் கடன்பட்டிருக்கிறோம், பொறுப்பாளிகளாக இருக்கிறோம்.

இது நாம் செலுத்த வேண்டிய விலைக்கிரயமாக இருக்கிறது. அதே நேரத்தில், நம்முடைய நன்றியுணர்வை நாம் வெளிப்படுத்தும்போது, அது நம் ஆவியில் ஏதோ ஒரு கிரியையைச் செய்கிறது. வேறு எதுவும் இதைச் செய்ய முடியாது.

நான் அதை இவ்வாறு சொல்கிறேன்: நன்றியுணர்வு, நம்முடைய ஆவியை தேவனுக்குப் பிரியமான ஆராதனை மற்றும் ஊழியத்திற்கு நேராக கட்டவிழ்க்கிறது. ஆகையால்தான் எபிரெய நிருப ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக்கடவோம் (நம் நன்றியுணர்வை வெளிப்படுத்தக்கடவோம்)” (எபிரெயர் 12:28).

நன்றியுணர்வு இல்லாமல், தேவனுக்கு நாம் செய்கிற பணிகள், ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாய் இருக்காது. “நன்றியுணர்வுள்ள சிந்தைதான்,” தேவனுக்காக நாம் செய்கிற பணிகளை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாய் மாற்றுகிறது.

அதுதான் நம் ஆவியை விடுவிக்கிறது. நன்றியுணர்வை வெளிப்படுத்தாத ஒரு மனுஷன், சிறையிருப்பில் கட்டப்பட்ட மனுஷனாக இருக்கிறான். அவன் சுயநலமானவன். மெய்யான விடுதலை என்பதே அவனுக்குத் தெரியாது. ஆனால் நன்றியுணர்வு, நம்முடைய ஆவியை கட்டவிழ்க்கின்றது.

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் (நன்றி சொல்லுங்கள்). அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆவியை அவித்துப் போடாதிருங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:18-19).

இது தெளிவான ஒரு கட்டளையாயிருக்கிறது: நாம் நன்றி சொல்லவில்லை என்றால், நாம் கீழ்ப்படியவில்லை என்று அர்த்தம். நாம் தேவனுடைய சித்தத்தை விட்டு வெளியே இருக்கிறோம் என்றும் அர்த்தம்.

அது மட்டுமல்ல, தேவனுக்கு நன்றி சொல்லத் தவறும்போது, நாம் ஆவியானவரை அவித்துப் போடுகிறோம் (அமர்த்திப் போடுகிறோம்; அவருடைய அக்கினியை தணித்து விடுகிறோம்).

ஆவியானவர், அவருடைய விருப்பத்திற்கேற்றபடி செயல்பட வேண்டுமென்றால், நாம் தேவனுக்குப் பிரியமான விதத்தில் ஆராதனை செய்ய வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும். அது நன்றி சொல்வதன் மூலமாக நடக்கிறது.

“நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்,” என்ற எச்சரிக்கையுடன் எபிரெயர் 12-ம் அதிகாரம் முடிவதை நாம் கவனிக்க வேண்டும் (29-ம் வசனம்).

அதாவது எபிரெய நிருப ஆசிரியர் இவ்வாறு நமக்குச் சொல்கிறார்: “பரிசுத்தமான, பயப்படத்தக்க இந்த தேவனை நாம் சரியான சிந்தையுடன் அணுக வேண்டும். அதாவது தாழ்மையான, நன்றியுணர்வு உள்ள இருதயமுடையவர்களாய் நாம் தேவனிடம் வர வேண்டும்.”

கர்த்தாவே, நீர் எனக்காக செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. பரிசுத்தமான, பயப்படத்தக்க தேவனிடம் தாழ்மையான, நன்றியுணர்வு உள்ள இருதயத்தோடு நான் வருகின்றேன். இந்த சிந்தைதான், என் ஆவியை தேவனுக்குப் பிரியமான விதத்தில் ஆராதிக்கும்படி, அவருக்கு ஊழியம் செய்யும்படி கட்டவிழ்க்கிறது. இதை நான் அறிந்திருக்கிறேன். எனவே நான் என் நன்றியுணர்வை தேவனிடம் காண்பிப்பேன். ஆமென்.