டிசம்பர் 20, சிலுவை, கிறிஸ்துவிற்கென்று வேறுபிரிக்கபட்ட வாழ்க்கையின் அடையாளம்

பாளயத்தை விட்டு வெளியே, புறம்பே அவரிடமாய் நாம் செல்லக்கடவோம்

யோவான் எழுதிய சுவிசேஷத்தில், இயேசு இவ்வாறு சொல்கிறார்:

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களை பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்தது என்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதை சிநேகித்திருக்கும்.

நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது. (யோவான் 15:18-19).

இவ்வுலகம் “நம்மை தனக்குரியவர்களாய் நேசிக்கிறது” என்றால், அதுவே நாம் இயேசுவுக்குரியவர்களாய் வாழவில்லை என்பதற்கு நிச்சயமான ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த எச்சரிக்கைக்கு நாம் செவிகொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

அப்படியென்றால், இந்தச் சூழ்நிலையில், நம்முடைய சிந்தை என்னவாக இருக்க வேண்டும்? கலாத்தியர் 6:14-ல், பவுல் இதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்:

“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே அல்லாமல், வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்.”

நாமும் கர்த்தராகிய இயேசுவின் சிலுவையைத் தவிர, வேறு எதன் மீது தைரியம் கொள்ளாதிருப்போமாக. நாமும் கர்த்தராகிய இயேசுவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்து பெருமை பாராட்டாதிருப்போமாக.

நாம் கற்ற கல்வியின் மீதோ, நம் மதத்தின் மீதோ, நம் சபைப் பிரிவின் மீதோ, இப்படிப்பட்ட காரியங்கள் எவற்றின் மீதும் நாம் தைரியமோ, பெருமையோ கொள்ளக் கூடாது. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மட்டுமே நாம் மேன்மை பாராட்ட வேண்டும்.

அது மட்டுமே, நமக்கு பாதுகாப்பாக இருக்கும். அந்தச் சிலுவையில்தான், இயேசு முழுமையான, நிரந்தரமான, ஒருக்காலும் திருப்ப முடியாத ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

எல்லா தீய சக்திகளின் மீதும், இயேசுவே ஜெயங்கொண்ட வெற்றியாய் அது இருக்கிறது. சிலுவையின் மூலம், “இவ்வுலகம் எனக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.

நானும் இவ்வுலகத்திற்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்,” என்பதே நம் சிந்தையாய், நம் அறிக்கையாய், நம் வாழ்க்கைமுறையாய் இருக்க வேண்டும். சிலுவைதான், தேவனுடைய ஜனங்களுக்கும், இவ்வுலகத்தாருக்கும் இடையேயான வித்தியாசத்தின் அடையாளமாய் இருக்கிறது. சிலுவைதான், நாம் தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

சிலுவையின் இந்தக் கோட்பாட்டை நாம் நம் வாழ்க்கையில் பின்பற்றும்போது, நாம் இனி இவ்வுலகத்திற்குரியவர்களாய், இவ்வுலகத்திற்குச் சொந்தமானவர்களாய் வாழ மாட்டோம்.

இயேசு அழகான ஒரு வெற்றியின் வாக்குத்தத்தத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். யோவான் 16:33-ஐ வாசிப்போம்: “என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு, இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள் (தைரியமாய், உற்சாகமாய் இருங்கள்). நான் உலகத்தை ஜெயித்தேன்.”

நமக்கு நிச்சயமாகவே உபத்திரவம் உண்டு. ஆனால் இயேசு இவ்வுலகத்தை ஜெயித்திருக்கிறார்! அவர் மூலமாய், நாமும் கூட இவ்வுலகத்தை ஜெயித்திருக்கிறோம். ஆம், அவருடைய நிந்தையைச் சுமந்தவர்களாய், பாளயத்திற்கு (இவ்வுலகத்திற்கு) புறம்பே, அவரிடம் செல்வதற்கு நாம் விருப்பமுள்ளவர்களாய் இருப்போம் என்றால், அவர் மூலமாய், நாமும் கூட இவ்வுலகத்தை ஜெயித்திருக்கிறோம்.

கர்த்தாவே, இவ்வுலகத்தை பின்னே தள்ளி விட்டு, உம்மை நோக்கி வரும்படி நீர் என்னை அழைத்திருக்கிறீர். உமக்கு நன்றி. இவ்வுலகத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை வேறுபிரித்துக் காண்பிக்கிற அடையாளமாகிய சிலுவையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் இவ்வுலகத்திற்குச் சொந்தமானவன் அல்ல. எனவே பாளயத்திற்கு வெளியே, புறம்பே, அவரை நோக்கி நான் செல்கிறேன். ஆமென்.