சரியான ஐக்கியத்தில் பங்கெடுங்கள்

 

நாம் ஒருவர் மற்றவரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கக்கடவோம்

 

தேவனோடும், நம் சக விசுவாசிகளோடும் ஐக்கியம் கொண்டவர்களாய் நாம் வாழும்போது, அதே
தன்மையுள்ள ஒரு ஐக்கியத்தை அவிசுவாசிகளுடனும் நாம் கொண்டிருக்க முடியாது என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

 

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும்
சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?
அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கு ஏது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும்
சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள்
தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொன்னபடி, நீங்கள்
ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:14-16)

 

அவிசுவாசிகளை விட்டுப் பிரிந்து வாழ வேண்டும் என்று பவுல் சொல்லும்போது, அது
பிரதானமாக சரீரப்பிரகாரமான ஒன்றைக் குறிக்கவில்லை. காரணம், ஒவ்வொரு நாளும், நம் வீடுகளிலும்,
நாம் வேலை பார்க்கிற இடங்களிலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளிலும் நம்மைச் சுற்றிலும்,
நமக்கு அருகிலும் அவிசுவாசிகள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நாம்
மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், மற்றவர்களிடம் இணக்கமாய், அன்பாய், ஆதரவாய் நடந்து
கொள்ள வேண்டும். இதுதான் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய சாட்சியாய் இருக்க வேண்டும். ஆனால்
ஒழுக்கரீதியாக அசுத்தமான விஷயங்களில் அவிசுவாசிகளோடு சேர்ந்து நாமும் பங்கெடுக்கக்கூடாது.
ஆவிக்குரிய ரீதியில், கிறிஸ்துவை கனயீனம் பண்ணும் விஷயங்களில், கிறிஸ்துவுக்கு அவகீர்த்தியை
உண்டு பண்ணக்கூடிய விஷயங்களில், அவிசுவாசிகளோடு சேர்ந்து நாமும் பங்கெடுக்கக்கூடாது.

 

இந்த விஷயத்தில், நாம் பவுலின் எச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும். 2 கொரிந்தியர் 6:17-ல், பவுல்
எழுதுகிறார், “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்.” நாம் பரிசுத்தஆவியானவரைக் குறித்த உணர்வுள்ள
வர்களாய் வாழ்வோம் என்றால், நம்மைக் கறைபடுத்தக்கூடிய தொடர்புகளைக் குறித்து, அவர்
எப்பொழுதும் நம்மை எச்சரிப்பார். அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்ள
வேண்டும் என்பதையும் அவர் நமக்குக் காண்பிப்பார்.

 

சரியான ஐக்கியம்தான், தவறான ஐக்கியத்திலிருந்து நம்மை நிச்சயமாய் பாதுகாக்கக்கூடிய ஒரு
கவசமாய் இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், எண்ண முடியாத, அளவிலா
சந்தோஷங்களுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் சுதந்தரவாளிகளாய் இருக்கிறோம். அவற்றைக் குறித்து
இவ்வுலகத்திற்கு ஒன்றும் தெரியாது.

 

உண்மையில், நம்முடைய பிதாவாகிய தேவன், “உன்னதங்களில்,
கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்,” என்று பவுல்
நமக்கு எழுதியிருக்கிறார் (எபேசியர் 1:3). இந்த ஆசீர்வாதங்களை தேவனுடைய குடும்பத்தாரோடு நாம்
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும்போது, இவ்வுலகத்தின் போலியான, பகட்டான, அசுத்தமான
சந்தோஷங்களால் நாம் இனி கவர்ந்திழுக்கப்பட மாட்டோம்.

 

இவ்வுலகத்தாரைப்போல, நாம் அந்தகாரத்தில் நடக்க மாட்டோம்.

 

கர்த்தாவே, மற்றவர்களை நேசிக்கும்படி நீர் எனக்கு உதவி செய்கிறீர். உமக்கு நன்றி. நான் அந்தகார
ஐக்கியத்திலிருந்து வெளியே வந்து, கிறிஸ்துவுக்குள் என் சகோதரர்களும், சகோதரிகளுமாயிருக்கிற
தேவனுடைய குடும்பத்தாரோடு ஐக்கியம் கொள்கிறேன். மற்றவர்களைக் குறித்து நான் எண்ணிப் பார்ப்பேன்.

 

ஆமென்...