கிறிஸ்தவ ஜீவியம் - நிதானமாய் ஓட வேண்டிய நீண்ட ஓட்டப்பந்தயம்

 


நம்முடைய ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்

 

எபிரெயர் 12:1-ல், “பாரமான யாவற்றையும் உதறித் தள்ளி விட்டு,” என்று எழுதப்பட்டிருக்கிற
வார்த்தைகளை, நாம் ஓட்டப்பந்தயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற வீரர்,
தன்னுடைய பாக்கெட்களை காலியாக வைத்திருப்பார். இலேசான உடைகளைத்தான் அவர் அணிவார்.

 

விறைப்பான உடைகளை அவர் அணிய மாட்டார். நெகிழ்வான உடைகளைத்தான் அவர் அணிவார். ஒரு
சிறிய கல்லின் எடையளவு கொண்ட எதையும் கூடுதலாக அவர் எடுத்துச் செல்ல மாட்டார். சில
காரியங்கள் நேரடியான பாவச் செயல்களாக இல்லையென்றாலும், அவை நம்மை பாரப்படுத்துகிற, நம்மை
பின்னுக்கு இழுக்கின்றவைகளாய் இருக்கின்றன. அவை நம்முடைய ஆற்றலை வீணடித்து விடுகின்றன.

 

அவை நம்மை கவர்ந்திழுத்து மிகவும் அதிகமான நேரத்தையும், கவனத்தையும் அவற்றின் மீது
செலவழிக்கும்படி செய்து விடுகின்றன. இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது 100 மீட்டர் வேகமான
ஓட்டப்பந்தயம் அல்ல. இது நிதானமாய், நீடிய பொறுமையுடன் நீண்ட தூரம் ஓட வேண்டிய ஒரு
ஓட்டமாக இருக்கிறது. இதில் பிரதானமாக தேவைப்படுகிற குணம், நீடிய பொறுமையாகும்.

 

பலர் தங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தை, 100 மீட்டர் வேகப் பந்தயம் போல ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சக்
காலத்திற்குப் பிறகு, பந்தயத் தடத்திலிருந்து விலகி, ஓரமாய் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவுதான், அவர்கள் ஓட்டத்தை முடித்து விட்டார்கள். உண்மையைச் சொன்னால், அவர்கள் இன்னும்
ஓட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை.

 

பிரசங்கி 9:11-ம் வசனம், ஞானமாய் ஒன்றைச் சுட்டிக் காண்பிக்கிறது,
“ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்கு சவுரியவான்களின் சவுரியமும் போதாது.”
தன் ஓட்டத்தை வெற்றிகரமாய் ஓடி முடித்த அப்போஸ்தலனாகிய பவுலின் சாட்சியை பின் வரும்
வசனங்களில் வாசிப்போம்: நல்ல போராட்டத்தைப் போராடினேன்.

 

ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்
கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள
நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல.
அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். (2 தீமோத்தேயு 4:7-8).

 

பவுல் இந்த ஓட்டத்தில் ஜெயித்து விட்டார். அவர் அதை அறிந்திருந்தார். அவர் தன் ஓட்டத்தை
வெற்றிகரமாய் ஓடி முடித்தார். பரிசுப் பொருள் தனக்காக காத்திருக்கிறது என்பதையும் அவர்
அறிந்திருந்தார். இது ஒரு மகிமையான சாட்சியாகும். இது உங்களுடைய சாட்சியாகவும், என்னுடைய
சாட்சியாகவும் இருக்க முடியும். நாம் இதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வோம் என்றால், இது
நமக்கும் சாத்தியம்தான்.

 

இதில் நம்முடைய வேகமோ அல்லது நம் வலிமையோ போதாது. நீடிய பொறுமைதான் இதற்கு
அத்தியாவசியமானதாக இருக்கிறது.

 

கர்த்தாவே, நான் “தொடர்ந்து ஓடும்படி,” நீர் எனக்கு உதவி செய்கிறீர். இந்த நீண்ட ஓட்டப்பந்தயத்தை
நிதானமாய் ஓடி முடிக்கும்படி, ஒரு ஆயத்தமாய், பாரமான யாவற்றையும் நான் உதறித் தள்ளுகிறேன்.
இலக்கை நோக்கி, நீடிய பொறுமையோடு நான் இந்த ஓட்டத்தை ஓடுவேன்.

 

ஆமென்...