கிறிஸ்தவ ஜீவியம் – விடா முயற்சியுடன், தொடர்ந்து உறுதியாய் ஓட வேண்டிய ஒரு ஓட்டம்

 

நம்முடைய ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்

 

நீடிய பொறுமையை பண்படுத்தி வளர்க்கும்படி நமக்கு உதவி செய்யக்கூடிய சில எளிமையான
கோட்பாடுகளை இப்பொழுது நாம் பார்ப்போம். முதலில், ரோமர் 5:1-2 வசனங்களில் பவுல் என்ன
எழுதியிருக்கிறார் என்று கவனிப்போம்: “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்
பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம்
பெற்றிருக்கிறோம்.

 

அவர் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை
விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே
மேன்மை பாராட்டுகிறோம்.” தேவமகிமையை அடைவோம் என்கிற நம்முடைய பிரகாசமான
எதிர்காலத்தைக் குறித்து நாம் களிகூருகிறோம் என்று பவுல் சொல்கிறார். இன்னும் பவுல் தொடர்ந்து
சொல்கிறார். எதிர்காலத்தைக் குறித்து, நாம் களிகூருகிறோம். ஆனால் அதோடு முடியவில்லை.

 

இப்பொழுது நம்மைச் சுற்றி நமக்கு நடக்கின்ற காரியங்களைக் குறித்தும் நாம் களிகூருகிறோம். தொடர்ந்து
3-4 வசனங்களை வாசிப்போம்: “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை
நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும்
மேன்மைபாராட்டுகிறோம்

 

[உபத்திரவம் விடாமுயற்சியையும், விடாமுயற்சி சோதனையில் உறுதியாய்
நிற்கும் குணாதிசியத்தையும், சோதனையில் உறுதியாய் நிற்கும் குணாதிசியம் நமக்குள் நம்பிக்கையையும்
உண்டாக்குகிறதென்று அறிந்தவர்களாய், நமக்கு நேரிடுகிற உபத்திரவங்களைக் குறித்தும் நாம்
களிகூருகிறோம்].”

 

4-ம் வசனத்தில், “மேன்மை பாராட்டுகிறோம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தை,
கிரேக்க மூல மொழியில், “களிகூருகிறோம், ஆர்ப்பரிக்கின்றோம், பெருமிதம் கொள்கிறோம்,” என்ற
அர்த்தத்தில் வருகின்றது. உபத்திரவம் நமக்கு கொண்டு வருகிற நன்மைகளின் நிமித்தம், நாம்
உபத்திரவங்களைக் குறித்து உற்சாகமாய் ஆர்ப்பரிக்கின்றோம். நியு அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வேதாகம
மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது, “உபத்திரவம், விடா முயற்சி எனும் குணத்தை உருவாக்குகிறது.

 

விடா முயற்சி, சோதனையில் உறுதியாய் நிற்கும் குணாதிசியத்தை உருவாக்குகிறது. சோதனையில்
உறுதியாய் நிற்கும் குணாதிசியம், நம்பிக்கையை உருவாக்குகிறது.” ஆக, விடாமுயற்சி, சோதனையின்
மத்தியில் உறுதியாய் நிற்கக்கூடிய குணத்தை நமக்குள் உருவாக்குகிறது. இதுதான் நீடிய பொறுமையின்
மையமாக, அதன் இருதயமாக இருக்கிறது.

 

நீடிய பொறுமைதான், சோதனையில் உறுதியாய் தரித்து
நிற்கும் குணமாயிருக்கிறது. தொடர்ந்து பவுல் எழுதுகிறார்: “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே
தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் அருளப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை
வெட்கப்படுத்தாது (ஏமாற்றாது)” (ரோமர் 5:5).

 

அன்பு, குணாதிசியத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. இங்கு நாம், நமக்குள்
உருவாக வேண்டிய குணாதிசியத்தைக் குறித்துத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம்
உபத்திரவங்களைக் குறித்து உற்சாகமாய் ஆர்ப்பரிக்கின்றோம். காரணம், உபத்திரவம்தான், நமக்குள்
விடாமுயற்சியை உருவாக்குகிற ஒரே காரியமாக இருக்கிறது.

 

விடாமுயற்சி, சோதனையில் உறுதியாய்
நிலைத்து நிற்கும் குணாதிசியத்தை உருவாக்குகிறது. கடினமான நேரங்களில், கடும் எதிர்ப்பின் மத்தியில்,
என்னைக் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்பட்ட நேரங்களில், நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட
சூழ்நிலைகளில், என்னோடு கூட நடந்த, அவற்றை என்னோடு பகிர்ந்து கொண்ட நபர்களை எனக்குத்
தெரியும்.

 

இன்றைக்கு என்னைப் பொறுத்தவரை, அவர்களுடைய குணம் நிரூபிக்கப்பட்ட
ஒன்றாயிருக்கிறது. இப்பொழுது நான் அவர்களை நிச்சயமாக நம்பலாம். அது எனக்குத் தெரியும்.
நம்பிக்கைத் துரோகம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக கிரியைகள் நடக்கின்ற சூழ்நிலைகளின் மத்தியில்,
யாரை நான் நம்ப வேண்டும் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

 

கர்த்தாவே, நான் “தொடர்ந்து ஓடும்படி,” நீர் எனக்கு உதவி செய்கிறீர். ஓட்டத்தை வெற்றியாய் ஓடி
முடிக்கத் தேவையான உறுதியான குணாதிசியத்தையும், நம்பிக்கையையும் எனக்குள் உருவாக்கக்கூடிய

உபத்திரவங்களைக் குறித்து உற்சாகமாய் களிகூருகிறேன்.

இலக்கை நோக்கி, நீடிய பொறுமையோடு நான் இந்த ஓட்டத்தை ஓடுவேன்.

 

 

ஆமென்...