கிறிஸ்தவ ஜீவியம் – முடிவு வரை ஓட வேண்டிய ஒரு ஓட்டப்பந்தயமாகும்

 


நம்முடைய ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்

 

கிறிஸ்துவின் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்திலிருந்து பின் வாங்கக்கூடிய ஆபத்தைக் குறித்து,
எபிரெய நிருபம் முழுவதிலும் மாறாத தொனியில் சொல்லப்பட்டிருக்கிறது. எபிரெய நிருபத்தின் ஐந்து
வெவ்வேறு பகுதிகள், பின் வாங்கும் ஆபத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இவை வேதவசனத்தில்
எழுதப்பட்டிருக்கிற மிகவும் கடுமையான எச்சரிப்பின் வார்த்தைகளாய் இருக்கின்றன. அவ்விதத்தில்,
எபிரெய நிருபம் முக்கியப்படுத்தி வலியுறுத்திச் சொல்கிற “நீடிய பொறுமை” என்ற வார்த்தையைத்தான்
இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும், நீடிய
பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்கிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு
நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி, நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே
ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

 

(எபிரெயர் 6:11-12) “விசுவாசத்தினாலும், நீடிய பொறுமையினாலும்” என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் மட்டுமே போதுமானது என்று
சிலர் உங்களிடம் சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல. உங்களுக்கு விசுவாசமும், நீடிய
பொறுமையும் தேவையாயிருக்கிறது. இவ்விரண்டும் உங்களுக்கு அத்தியாவசியமானதாயிருக்கிறது.

 

எபிரெய நிருப ஆசிரியர் தொடர்ந்து எழுதுகிறார், “ஆகையால் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள்
தைரியத்தை விட்டு விடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்
பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரெயர் 10:35-36)
“தைரியம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம், உங்களுக்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதாகும்.

 

எனவே நீங்கள் இயேசுவைக் குறித்து தைரியமாகப் பேச முடியும். அவர் உங்களுக்காக என்ன
செய்திருக்கிறர், அவர் உங்களுக்காக என்ன செய்வார் என்பதையெல்லாம் குறித்து நீங்கள் தைரியமாகப்
பேச முடியும். பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள்
இன்னும் வாக்குத்தத்தங்களைப் பெறவில்லை, சுதந்தரிக்கவில்லை.

 

அப்படியென்றால், இப்பொழுது
உங்களுக்கு என்ன தேவை? நீடிய பொறுமைதான். நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து,
வாக்குத்தத்தத்தை உரிமைபாராட்டிய அந்த நிலையிலிருந்து, நீங்கள் மெய்யாகவே வாக்குத்தத்தத்தை
பெற்றுக் கொள்கிற, அதைச் சுதந்தரிக்கிற அந்த நிலையை அடையும் வரை, நீங்கள் நீடிய பொறுமையோடு
நிலைத்திருக்க வேண்டும். சிலர் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறார்கள், வாக்குத்தத்தத்தையும்
உரிமைபாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நீடிய பொறுமையோடு நிலைத்திருப்பதில்லை.

 

பிறகு அவர்கள், “இது வேலை செய்வதில்லை,” என்று சொல்லி விடுகிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீடிய பொறுமை இல்லாமல், இது வேலை செய்யாது. உங்களுக்கு விசுவாசமும், நீடிய பொறுமையும்
தேவையாயிருக்கிறது.

 

 

கர்த்தாவே, நான் “தொடர்ந்து ஓடும்படி,” நீர் எனக்கு உதவி செய்கிறீர். தேவனுடைய சித்தத்தைச் செய்து,
வாக்குத்தத்தங்களை உரிமைபாராட்டி, அவற்றை சுதந்தரிக்கும்படி, முடிவு வரை நான் விசுவாசத்தோடும்,

நீடிய பொறுமையோடும் நிலைத்திருக்கப் போகிறேன்.

இலக்கை நோக்கி, நீடிய பொறுமையோடு நான் இந்த ஓட்டத்தை ஓடப் போகிறேன்.

 

ஆமென்...