“நன்றி” என்று தேவனிடம் சொல்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்

 


தேவனிடத்தில் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்தக்கடவோம்

 

சிலர் மெய்யாகவே தேவனிடம் நன்றியுணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும்
நேரமெடுத்து, தேவனுக்கு நன்றி சொல்வதில்லை. அதாவது, தங்களுடைய நன்றியுணர்வை தங்களுடைய
வாய் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவதில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் நிறைய
நன்மைகளைச் செய்கிறோம்.

 

ஆனால் அவர்கள் ஒருபோதும் நமக்கு நன்றி சொல்வதில்லை என்றால்,
அதை நாம் எப்படி உணருவோம்? “அப்பா நன்றி, அம்மா நன்றி,” என்று அவர்கள் ஒருபோதும்
சொல்லவில்லை என்றால் அல்லது தங்களுடைய நன்றியுணர்வை தங்கள் வாய் வார்த்தைகளில்
வெளிப்படுத்தவில்லை என்றால், அதைக் குறித்து நாம் எவ்வளவு வருத்தப்படுவோம்?

 

இதை சிந்தித்துப் பாருங்கள். நாம் அவர்களுக்குச் செய்யும் எல்லா நன்மைகளையும், ஏதோ தங்களுடைய உரிமைபோல,
அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்றால், அதை மிக மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்
என்றால், அதை நம்மை வருத்தப்படுத்துமல்லவா?

 

ஆனால் அவ்விதத்தில்தான் இன்று தேவனுடைய பிள்ளைகளில் பெரும்பாலானோர் தேவனிடம்
நடந்து கொள்கின்றனர். இது வருந்தத்தக்க விஷயம்தான். இது தேவனைப் பிரியப்படுத்துவதில்லை.
தேவன் நமக்காக செய்த நன்மைகளின் நிமித்தம், நாம் நன்றியுணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நேரமெடுத்து, நம்முடைய நன்றியை தேவனிடத்தில் நம் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

 

நீதிமொழிகள் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் ஒன்றை இங்கே எடுத்துக் காண்பிக்க
விரும்புகிறேன். நீதிமொழிகள் 3:6-ஐ வாசிப்போம்: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்.
அப்பொழுது அவர் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

 

நான் இதை அனுபவத்தினால் கற்றுக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு
கட்டத்திலும், நான் தேவனை நினைத்து, அவரை என் தேவனாக அங்கீகரித்து கனம் பண்ணுவேன்
என்றால், அவர் என் பாதையில் எனக்கு வழி காட்டுவார் என்பதைக் குறித்து நான் நிச்சயமாக, தைரியமாக
இருக்க முடியும். “நான் எவ்வாறு தேவனை அங்கீகரித்து, கனம் பண்ண வேண்டும்?” என்று நீங்கள்
கேட்கலாம்.

 

ஒரு எளிமையான, சிறந்த வழி, அவருக்கு நன்றி சொல்வதுதான். அவர் செய்திருக்கிற எல்லா
நன்மைகளுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுங்கள். “தேவனே, உமக்கு
நன்றி,” என்று சொல்லுங்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார் என்ற
நிச்சயத்தை உடனடியாக பெற்றுக் கொள்வீர்கள். கடந்த காலத்தில், அவர் உங்களுக்கு உதவி செய்தார்.
அவர் உங்களை வழிநடத்தினார். அப்படியே எதிர்காலத்திலும், அவர் உங்களை வழிநடத்துவார்.

 

ஆனால் இந்த நிச்சயத்தைப் பெறுவதற்கான திறவுகோல், “தேவனே, உமக்கு நன்றி,” என்று சொல்லி, அவரை
எப்பொழுதும் அங்கீகரிப்பதுதான்.
நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தபோது, நான் தத்தெடுத்து வளர்த்த ஆப்பிரிக்க மகளின்
இனத்தைச் சேர்ந்தவர்களின் மொழியில், “நன்றி” என்ற வார்த்தையே இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

 

“நன்றி” சொல்வதற்கு ஒரு வார்த்தையும் இல்லையென்றால், உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க
முடிகிறதா? வேதாகமம் வரும்போது மட்டுமே, “நன்றி” என்ற வார்த்தையை அவர்கள் கற்றுக்
கொள்கிறார்கள் என்பதை அப்பொழுது நான் புரிந்து கொண்டேன். இது தேவனுடைய கிருபையின் ஒரு
பங்காயிருக்கிறது.

 

 

கர்த்தாவே, நீர் எனக்காக செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. என்னுடைய
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், நான் நின்று நிதானித்து, தேவனுக்கு நன்றி சொல்வதன் மூலம்,

அவரை அங்கீகரித்து, அவரை கனம் பண்ணுவேன்.
நான் என் நன்றியுணர்வை தேவனிடம் காண்பிப்பேன்.

 

ஆமென்...