தேவநீதியினால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது

 


இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன்,
ஒருபோதும் பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

 

அநீதியாய் வாழ்கின்ற ஜனங்களை தேவன் நீதிமான்களாக மாற்றுகின்றார். வேதவசனம் இதைச்
சொல்கிறது. எனவே நான் இதை விசுவாசிக்கிறேன். இந்த சத்தியத்தை உறுதிப்படுத்துகிற ஒரு
எளிமையான வசனத்தை நாம் பார்ப்போம்: “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம்
அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21).

 

இவ்வசனத்தில், ‘அவர்’ என்று வருகிற இடங்களில், பெயர்களை இட்டு வாசிக்கின்றேன்:
“இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாய் நாம் மாறும்படி, பாவமே அறியாத இயேசுவை தேவன்
உங்களுக்காகவும், எனக்காகவும் பாவமாக்கினார்.” இது ஒரு முழுமையான பரிமாற்றமாக இருக்கின்றது.
இயேசு கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமான்களாக்கப்படும்படி, நம்முடைய பாவத்தினால் அவர்
பாவமாக்கப்பட்டார்.

 

இந்த நீதி, அவருடைய இரத்தத்தின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் நமக்குக்
கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது. இந்த நீதியானது சில நிச்சயமான நன்மைகளை நமக்குக் கிடைக்கச் செய்கிறது. இந்த நன்மைகள்
உண்டாக்கக்கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும். வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த
நன்மைகளில் ஒன்றைப் பார்ப்போம். நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வளவாய் நாம்
அறிந்து அதன் மதிப்பை உணருகிறோமோ, அதைப் பொறுத்து நாம் வாழ்கின்ற விதம் மாறும்.

 

நம்முடைய சிந்தையிலும், நம்முடைய உறவுகளிலும் மாற்றம் உண்டாகும். நம்முடைய கிறிஸ்தவ ஜீவியம், கனிகள்
நிறைந்ததாய் மாறும். நற்கிரியைகளில் நாம் பெருகியிருப்போம். நீதிமொழிகள் 28:1-ஐ வாசிப்போம்:
“ஒருவனும் தொடராதிருந்தும், துன்மார்க்கர் ஓடிப் போகிறார்கள். நீதிமான்களோ சிங்கத்தைப்போல
தைரியமாயிருக்கிறார்கள்.”

 

இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இந்த தைரியம் இருப்பதில்லை. அவர்கள் கோழைகளாய்
வாழ்கின்றனர். தாங்கள் செய்த தவறுகளுக்கு மனம் வருந்திய நிலையில்தான் எப்பொழுதும்
காணப்படுகின்றனர். பிசாசை அவர்களால் தைரியமாய் எதிர்கொள்ள முடியவில்லை, பின் வாங்கி
விடுகின்றனர். அவர்களுடைய தோல்வியான வாழ்க்கைக்கு உண்மையான ஒர் வேர்க் காரணம் என்ன
தெரியுமா? தேவனுடைய பார்வையில், அவர்கள் நீதிமான்களாய் இருக்கின்றார்கள் என்ற வேதாகமச்
சத்தியத்தின் மதிப்பை அவர்கள் உணரத் தவறி விட்டனர் என்பதுதான்.

 

இயேசு கிறிஸ்துவைப்போலவே அவர்களும் நீதிமான்களாய் இருக்கின்றனர் என்பதைப் பார்க்கத் தவறி விட்டனர். இந்த சத்தியத்தின்
மதிப்பை நாம் உணரும்போது, அது நம்மை தைரியசாலிகளாய் மாற்றுகின்றது.

 

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான்
நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன், ஒருபோதும் பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்
என்று அறிக்கை செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நீதியினால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். இந்த
உணர்வு கொண்டு வருகின்ற தைரியத்திற்குள் நான் விசுவாசத்தினால் நுழைகின்றேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment