என் சரீரம்: பரிசுத்த ஆவியானவரின் ஆலயம்
என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட,
பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். “வானம்
எனக்குச் சிங்காசனமும், பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது. எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட
வீட்டைக் கட்டுவீர்கள்? நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது? இவைகள் எல்லாவற்றையும்
என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார்,” என்று தீர்க்கதரிசி
சொல்லியிருக்கிறானே. (அப்போஸ்தலர் நடபடிகள் 7:48-50).
மனுஷருடைய கைகளால் செய்யப்பட்ட ஒரு ஆலயத்தில் தேவன் வாசம் பண்ணுவதில்லை.
மாறாக, தேவனுடைய நோக்கத்தின்படி, தேவனுடைய கரங்களால் செய்யப்பட்ட ஒரு ஆலயத்தில்தான்
அவர் வாழ்கின்றார். அந்த ஆலயம், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட ஒரு
விசுவாசியினுடைய சரீரமாக இருக்கின்றது.
1 கொரிந்தியர் 6:13-ல், பவுல் எழுதிய வார்த்தைகளை
கவனிப்போம்: “வயிற்றுக்குப் போஜனமும், போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும்
அதையும் அழியப் பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல. கர்த்தருக்கே உரியது. கர்த்தரும்
சரீரத்திற்கு உரியவர்.” வயிற்றிற்காக உணவு என்பதைக் குறித்தும், உணவிற்காக வயிறு என்பதைக்
குறித்தும் இவ்வசனம் பேசுகிறது.
“நீதிமான் தனக்குத் (தன் ஆத்துமாவிற்குத்) திருப்தியாகப் புசிக்கிறான்,”
என்று நீதிமொழிகள் 13:25 சொல்கிறது. இயேசுவின் இரத்தத்தினால் நீதிமான்களாகியிருக்கிற நாம்
அளவுக்கு அதிகமாக உணவு உண்ணக்கூடாது. ஏன்? காரணம், நம்முடைய சரீரம், கர்த்தருடைய
ஆலயமாக இருக்கின்றது. எனவே அளவுக்கு அதிகமாக உண்ணும் பெருந்தீனிப் பழக்கத்தினாலும், மதுபான
வெறியினாலும், ஒழுக்கச் சீர்கேடுகளினாலும், நாம் அதைக் கறைப்படுத்தக்கூடாது, அவமதிக்கக்கூடாது.
வேறு எவ்விதத்திலும் நாம் நம் சரீரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. கர்த்தர் நம் சரீரத்தில் வாசம்
பண்ணுகிறார். எனவே நம் சரீரம் கர்த்தருக்குரியது. நான் என் சரீரத்தை கர்த்தரிடம் அர்ப்பணிக்கும்போது,
என் சரீரத்திற்குரிய உரிமைகளையும், பொறுப்பையும் கர்த்தர் எடுத்துக் கொள்கிறார்.
ஒரு எடுத்துக்காட்டை நாம் பார்ப்போம். சொந்தமாக ஒரு வீட்டை நான் வாங்கினால், அதற்குரிய
சகல பொறுப்புகளும் என்னிடம்தான் இருக்கும்.
மாறாக, நான் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தால், அந்த
வீட்டின் சொந்தக்காரர்தான் அதற்குரிய பொறுப்பை உடையவராக இருக்கிறார். நம் சரீரத்தின் மீது
தற்காலிகமான உரிமையை மட்டும் இயேசுவிடம் நாம் கொடுப்போம் என்றால், அதன் பராமரிப்பிற்குரிய
பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். மாறாக, நம் சரீரத்தை அவருக்கு சொந்தமான ஒன்றாக நாம்
விட்டுக் கொடுத்து விடுவோம் என்றால், அதன் பராமரிப்பிற்கான பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட உறவைத்தான் அவர் விரும்புகிறார்.
இயேசுவின் இரத்தத்திற்காகவும், எனக்குள் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற
கிரியைக்காகவும் உமக்கு நன்றி. என் சரீரம், பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயம் என்றும்,
என் சரீரத்திற்கான எல்லா உரிமைகளையும் கர்த்தராகிய இயேசுவிடம் நான் விட்டு விட்டேன் என்றும்
அறிக்கை செய்கிறேன். ஆகையால் அளவுக்கு அதிகமாக உண்ணும் பெருந்தீனிப் பழக்கத்தினாலும்,
மதுபான வெறியினாலும், ஒழுக்கச் சீர்கேடுகளினாலும் நான் அதைக் கறைப்படுத்த மாட்டேன்.
வேறு எவ்விதத்திலும் நான் அதைத் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.
என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர்
வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.
ஆமென்...
Leave a comment