பிப்ரவரி 14, நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள்

என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது

நாம் நம்முடைய சரீரத்தினாலும், நம்முடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது (1 கொரிந்தியர் 6:20). காரணம், இரண்டுமே தேவனுக்குச் சொந்தமானவைகளாய் இருக்கின்றன.

இரண்டுமே இயேசுவின் இரத்தத்தினால் பிசாசினுடைய கொடூரமான, பயங்கரமான கரத்திலிருந்து விலைக்கிரயம் கொடுத்து, மீட்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது என்னுடைய ஆவியோ, என் ஆத்துமாவோ அல்லது என் சரீரமோ, எதுவும் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ், அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.

இந்த இடத்தில் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். இப்பொழுது என்னிடம் உயிர்த்தெழுந்த சரீரம் இல்லை. மாறாக, அழிவுக்கேதுவான சரீரமே இருக்கிறது.

ஆனால் அந்த அழிவுக்கேதுவான சரீரத்தின் ஒவ்வொரு உயிரணுவும், தசைநார்களும், திசுகளும் தேவனுக்குச் சொந்தமானவைகளாய் இருக்கின்றன. இவை பிசாசின் சொத்து கிடையாது.

இவற்றுள் எதையாவது அவன் ஆக்கிரமித்திருக்கிறான் என்றால், அவன் அத்துமீறி அதைச் செய்திருக்கிறான் என்று அர்த்தம். எனவே இயேசுவுக்குள் நமக்கிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, “அத்துமீறி அந்நியன் எவனும் இங்கே பிரவேசிக்கக்கூடாது,” என்று ஒரு அறிவிப்பு மற்றும் எச்சரிப்பின் பலகையை நாம் வைக்க வேண்டும்.

சட்டப்பூர்வமாகப் பார்ப்போம் என்றால், நம்முடைய சரீரம் பிசாசுக்குச் சொந்தமானவை அல்ல.

மாறாக, இயேசுவுக்கே அது சொந்தம். நம் சரீரத்தைக் குறித்து இயேசு ஒரு விசேஷமான திட்டத்தை வைத்திருக்கிறார். தேவனுடைய திரித்துவத்தின் மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயமாக நம் சரீரம் இருக்க வேண்டும் என்று தேவன் முன் குறித்திருக்கிறார்.

நம் சரீரம், பரிசுத்தமானவையாக இருக்க வேண்டும். காரணம், பரிசுத்த ஆவியானவரின் வாசஸ்தலமாக, வீடாக, ஆலயமாக இருக்கும்படி நம் சரீரம் தேவனால் முன்குறிக்கப்பட்டிருக்கிறது.

மனுஷனுடைய கரங்களால் செய்யப்பட்ட ஆலயங்களில் தேவன் வாசம் பண்ணுவதில்லை என்று தெளிவாக, வேதவசனத்தில் பல முறை சொல்லப்பட்டிருக்கிறது (அப்போஸ்தலர் நடபடிகள் 7:48). அவர் சபைக் கட்டிடங்களிலும், சிற்றாலயங்களிலும், பேராலயங்களிலும், ஜெப ஆலயங்களிலும், ஆராதனை வீடுகளிலும் வாசம் பண்ணுவதில்லை. அவர் தம்முடைய ஜனங்களுக்குள் வாசம் பண்ணுகின்றார்.        

இயேசுவின் இரத்தத்திற்காகவும், எனக்குள் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற கிரியைக்காகவும் உமக்கு நன்றி. என் சரீரம் தேவனுக்குச் சொந்தமானது, பிசாசுக்கு அல்ல என்று நான் அறிக்கை செய்கிறேன். சட்டப்பூர்வமாக, என் சரீரம் பிசாசுக்கு அல்ல, இயேசுவுக்கே சொந்தமானது. அவர் என் சரீரத்தைக் குறித்து ஒரு விசேஷமான நோக்கத்தை வைத்திருக்கிறார். என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்.