ஆவியானவரால் புதுப்பிக்கப்படுகின்றோம்

 

என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட,
பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது

 

இரட்சிப்பில், புதுப்பிக்கப்படுதலும் உள்ளடங்கியிருக்கின்றது. தீத்து 3:5-ல் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்:
“நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர்(தேவன்) நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே,
மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.”
இவ்வசனத்தில் பவுல் குறிப்பிடுகின்ற இன்னொரு முக்கியமான விஷயம், புதுப்பிக்கப்படுதலாகும்.

 

நாம் புது சிருஷ்டிகளாய் மாற வேண்டும். 2 கொரிந்தியர் 5:17-ல் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து
போயின. எல்லாம் புதிதாயின.”

 

“புது சிருஷ்டி” என்ற வார்த்தை இங்கு மிகவும் முக்கியமானது. காரணம், சிருஷ்டிக்கிறவர் ஒருவர்
மட்டுமே. அவர் தேவன். மனுஷனால் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றிலிருந்து
இன்னொன்றை அவனால் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி செய்யப்பட்ட ஒன்றை அவனால் பழுது
பார்க்க முடியும், செப்பனிட முடியும், சீர்செய்ய முடியும். ஆனால் அவனால் சிருஷ்டிக்க முடியாது.

 

பாவத்தின் விளைவுகளால், நம்முடைய இருதயமும், நம்முடைய உள்ளான அனைத்தும்
கறைபட்டிருக்கிறது. திருக்குள்ளதும், கேடு நிறைந்ததுமாய் மாறி விட்டது. எனவே பழுது பார்ப்பதோ,
ஒட்டுப் போடுவதோ, செப்பனிட்டு சீர் செய்வதோ எந்தப் பலனையும் கொடுக்காது. புது சிருஷ்டிப்பு
மட்டுமே நல்ல பலனைக் கொடுக்கும்.

 

பழைய ஏற்பாட்டில், தாவீது இன்னொருவனுடைய மனைவியுடன் தவறான பாலியல் உறவு
கொண்டு, பாவம் செய்தான், கொலையும் செய்தான். கடைசியில், அந்தப் பாவத்தினால் அவனுடைய
இருதயம் அடைந்த மகா மோசமான, சீர்கேடான நிலையை அவன் எதிர்கொண்டான். “ஓ தேவனே,
எனக்குள் சுத்தமான இருதயத்தை சிருஷ்டியும்,” என்று தேவனை நோக்கி, வார்த்தைகளில் விவரிக்க
முடியாத வலிவேதனையில் கதறினான் (சங்கீதம் 51:10). மனுஷனால் அதைச் செய்ய முடியாது; தேவனால்
மட்டுமே அதைச் சிருஷ்டிக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.

 

தீத்து 3:5-ம் வசனத்தில், இரட்சிக்கப்படுதலில் நடக்கின்ற மூன்று முக்கியமான கிரியைகளைக்
குறித்து நாம் பார்த்திருக்கிறோம். ஒன்று, கழுவப்படுதல் அல்லது சுத்திகரிக்கப்படுதல். இரண்டாவது,
மறுபிறப்பு அல்லது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல். மூன்றாவது, புது சிருஷ்டிகளாக்கப்படுதல் அல்லது
புதுப்பிக்கப்படுதல். மனுஷனால் நிச்சயமாக இதைச் செய்ய முடியாது. ஆனால் தேவனால் நிச்சயமாக
இதைச் செய்ய முடியும். தேவனுடைய நியாயத்தினால் இது நடக்கவில்லை.

 

மாறாக, இதெல்லாம் தேவனுடைய இரக்கத்தினால் நடக்கின்றது. நம்முடைய நீதியின் கிரியைகளின் நிமித்தம் இது
நடக்கவில்லை. இவற்றினால் ஒன்றையும் சாதிக்க முடியாது. இரட்சிப்பு என்பது, சர்வ வல்ல
தேவனுடைய இறையாண்மையின் இரக்கத்தினால் நமக்கு உண்டாயிருக்கிறது.

 

இயேசுவின் இரத்தத்திற்காகவும், எனக்குள் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற
கிரியைக்காகவும் உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரால் நான் புதுப்பிக்கப்படுகின்றேன்.
நான் ஒரு புதுச் சிருஷ்டி; என் சொந்த நீதியின் கிரியைகளின் நிமித்தம் நான் இரட்சிக்கப்படவில்லை;
தேவனுடைய இரக்கத்தினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.
என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர்
வாசம் பண்ணுகிற ஆலயமாக இருக்கின்றது என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.

 

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment