பிப்ரவரி 19, மற்றவர்களை மன்னியுங்கள்

எனக்குரிய எல்லாவற்றிற்காகவும் இயேசுவின் இரத்தம் விலைக்கிரயம் செலுத்தி தீர்த்திருக்கிறது! எனவே சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை; என் மீது அவனுக்கு எந்த வல்லமையும் அதிகாரமுமில்லை; எனக்கு விரோதமாக உரிமைபாராட்டும்படி இன்னும் தீர்க்கப்படாத எந்த விஷயமும் அவனிடம் இல்லை!

மற்றவர்களை மன்னிக்கத் தவறுகின்ற விஷயத்தில், விசுவாசிகள் சாத்தானுக்கு தங்களுடைய வாழ்க்கையில் சட்டப்பூர்வமான உரிமையைக் கொடுக்கின்றார்கள். நாம் மற்றவர்களை எவ்வளவாய் மன்னிக்கின்றோமோ, அதே அளவின்படியே தேவனும் நம்மை மன்னிக்கின்றார் என்று இயேசு நமக்குப் போதித்திருக்கிறார்.

இயேசு சொன்னார்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:14-15).

நாம் மற்றவர்களை எவ்வளவாய் மன்னிக்கின்றோமோ, அதைக் காட்டிலும் அதிகமாக தேவன் நம்மை மன்னிக்க வேண்டும் என்று நாம் உரிமைபாராட்ட முடியாது. ஒரு குறிப்பிட்ட நபரை ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நாம் மன்னிக்கவில்லை என்றால், நாமும் தேவனால் மன்னிக்கப்பட மாட்டோம்.

அதாவது நம்முடைய வாழ்க்கையில் அந்த நபரை மன்னியாத இந்த விஷயத்தில், சாத்தான் இன்னும் சட்டப்பூர்வமான உரிமையை உடையவனாய் இருக்கிறான் என்பதுதான் இதற்கு அர்த்தம். யாரை மன்னிக்க வேண்டுமோ, அந்த நபரை நாம் மன்னிக்காதவரை, நம்மால் சாத்தானின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.

மீட்புடன் இணைந்துதான், பாவ மன்னிப்பும் நமக்கு உண்டாகிறது. நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும்போது, மீட்பின் எல்லா உரிமைகளும் சேர்ந்தே நமக்குக் கிடைத்து விடுகின்றது.

இந்த நிலையில், நமக்கு விரோதமாக எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் சாத்தான் உரிமைபாராட்ட முடியாது. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் இன்னும் பாவம் காணப்படுகிறது என்றால், அந்தப் பகுதியில் சாத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.

அதற்கான சட்டப்பூர்வமான உரிமை இப்பொழுதும் அவனுக்கு இருக்கிறது. வல்லமையான தேவ ஊழியக்காரர்களிடம் நாம் சென்று ஜெபிக்கலாம். எல்லா பிரசங்கியார்களும் நமக்காக ஜெபிக்கலாம். ஆனால் நம்மால் பிசாசின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.

காரணம், அவனுக்கு ஒரு சட்டப்பூர்வமான உரிமை இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். அவன் ஒரு சட்ட நிபுணன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவனுக்கும் அது  நன்றாகத் தெரியும். ஆனாலும் தேவனுடைய வார்த்தை, முழுமையான பாவ மன்னிப்பை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறது.

மற்றவர்களை முழுமையாக மன்னிப்பதன் மூலம், இந்த முழுமையான பாவ மன்னிப்பை நாம் உறுதியாய் பற்றிக் கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாக இருக்கிறது.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி. தேவனே, என்னுடைய பாவங்களை மன்னியும். நான் மன்னிக்க வேண்டிய ஒவ்வொரு நபரையும் இப்பொழுதே மன்னிக்கின்றேன் (நீங்கள் மன்னிக்க வேண்டிய ஒவ்வொரு நபரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை மன்னியுங்கள்). இதைச் செய்தவனாய் நான் அறிக்கை செய்கிறேன்: சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை, என் மீது அவனுக்கு எந்த வல்லமையும் அதிகாரமுமில்லை, எனக்கு விரோதமாக உரிமைபாராட்டும்படி இன்னும் தீர்க்கப்படாத எந்த விஷயமும் அவனிடம் இல்லை! காரணம், எனக்குரிய எல்லாவற்றிற்காகவும் இயேசுவின் இரத்தம் விலைக்கிரயம் செலுத்தி தீர்த்திருக்கிறது! ஆமென்.