யுத்தகளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்

 

சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை; என் மீது அவனுக்கு எந்த
வல்லமையும், அதிகாரமுமில்லை; எனக்கு விரோதமாக அவனுக்கு எந்த உரிமையும் இல்லை.

 

காரணம், இயேசுவின் இரத்தம் விலைக்கிரயத்தை முழுமையாக செலுத்தி தீர்த்திருக்கிறது!
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை
நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

 

அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா
மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்
சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். (2 கொரிந்தியர் 10:3-5)

 

சாத்தானுக்கு விரோதமான நம்முடைய யுத்தம், ஆவிக்குரிய மண்டலத்தில் செய்யப்படுகிறது.
ஆகையால் நம்முடைய ஆயுதங்கள் ஆவிக்குரியவைகளாயிருக்கின்றன, யுத்தம் நடக்கின்ற
மண்டலத்திற்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன.

 

யுத்தம் எங்கே நடக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அதிக
முக்கியத்துவம் உடைய ஒரு விஷயமாயிருக்கிறது. யுத்தகளத்தைக் குறித்தும், அதில் நம்முடைய
இலக்குகளைக் குறித்தும் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தில் பவுல் விவரித்து
எழுதியிருக்கிறார். அதற்கு அவர் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

 

வேதாகமத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் பின்வரும் வார்த்தைகளை நாம் பார்க்கின்றோம்: “பொல்லாத
கற்பனைகள்”; “தவறான நியாயங்கள்”; “தவறான ஊகங்கள்”; “தவறான தர்க்கங்கள்”; “பொல்லாத அறிவு”
மற்றும் “தீய சிந்தை” போன்ற பல வார்த்தைகளை நாம் பார்க்கின்றோம். இந்த எல்லா வார்த்தைகளுமே
நம்முடைய மனதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன.

 

ஆகையால் இந்த யுத்தம் நம்முடைய மனதில்
நடக்கின்றது என்பதை நாம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய மனதைச்
சிறைப்பிடிக்கும்படியே சாத்தான் தன்னுடைய எல்லா வித யுக்திகளையும் பயன்படுத்தி, நமக்கு
விரோதமாக யுத்தம் செய்கின்றான். அவன் நம்முடைய மனதில் பெரிய அரண்களையும், பலத்த
கோட்டைகளையும் எழுப்புகின்றான்.

 

இப்பொழுது தேவனுடைய பிரதிநிதிகளாய் வாழ்கின்ற நமக்கு ஒரு
பொறுப்பு இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, இந்த அரண்களை உடைத்து,
நிர்மூலமாக்கி, மனுஷர்களுடைய மனதில் ஒரு விடுதலையை உண்டு பண்ணி, கிறிஸ்துவுக்குக்
கீழ்ப்படியும்படி அவர்களை சிறைப்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பை நினைத்தால், இது நம்மை ஒரு
கணம் தடுமாறச் செய்கிறது!

 

சாத்தான் மிகவும் கவனமாக, அவசரப்படாமல், திட்டமிட்டு, ஒரு நோக்கத்தோடு ஜனங்களுடைய
மனதில் அரண்களையும், கோட்டைகளையும் படிப்படியாக கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறான். இந்த
அரண்கள், சுவிசேஷ சத்தியத்தையும், தேவனுடைய வார்த்தையையும் எதிர்த்து நிற்கின்றன. சுவிசேஷச்
செய்தியை நாம் பெற்றுக் கொண்டு விடாதபடி, இவை நமக்கு முன் ஒரு தடையாய் எழும்பி நிற்கின்றன.
ஆனால் இந்தத் தடையை உடைத்து, நிர்மூலமாக்கும் வல்லமை, தேவனுடைய வார்த்தைக்கும்,
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் இருக்கின்றது.

 

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி. இயேசுவின் இரத்தத்தினால், என் மனதில்
சாத்தான் கட்டியெழுப்பியிருக்கிற அரண்களை நான் உடைத்து நிர்மூலமாக்குகிறேன். சாத்தானுக்கு என்
வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை, என் மீது அவனுக்கு எந்த வல்லமையும் அதிகாரமுமில்லை.
எனக்கு விரோதமாக எவ்விதத்திலும் அவன் உரிமை பாராட்ட முடியாது. காரணம், இயேசுவின் இரத்தம்

முழுமையான விலைக்கிரயத்தைச் செலுத்தி தீர்த்திருக்கிறது!

 

 

ஆமென்...