பிப்ரவரி 23, உபவாசத்தின் வல்லமையைப் புரிந்து கொள்வோம்

சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை; என் மீது அவனுக்கு எந்த வல்லமையும், அதிகாரமுமில்லை; எனக்கு விரோதமாக அவனுக்கு எந்த உரிமையும் இல்லை.  காரணம், இயேசுவின் இரத்தம் விலைக்கிரயத்தை முழுமையாக செலுத்தி தீர்த்திருக்கிறது!

நாங்கள் உபவாசம் பண்ணும்போது, நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள். இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தை உடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப் பண்ணும்படியாய் இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலை வணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்கிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும், கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” (ஏசாயா 58:3-5)   

இவ்வேதப்பகுதி யாரைக் குறித்து பேசுகிறதோ, அவர்களுக்கு உபவாசம் என்பது வெறும் ஒரு மதச்சடங்காக மட்டுமே இருந்தது. இயேசுவின் நாட்களில், பரிசேயர்களும் இப்படிப்பட்ட ஒரு உபவாசத்தைத்தான் செய்தனர்.

மெய்யாகவே மனந்திருந்தி, தங்களுடைய சுயத்தைத் தாழ்த்தி உபவாசம் இருப்பதற்குப் பதிலாக, தங்களுடைய வழக்கமான உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்ற தீய குணங்களை தங்களுக்குள் காத்துக் கொண்டனர்.

அதைக் குறித்து அவர்கள் எதுவும் செய்யவில்லை. அதை விட்டு விடும்படி அவர்கள் முயற்சிக்கவும் இல்லை. மற்றவர்களை ஒடுக்குகிற வேலையையும் அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.

ஆனால் தேவனுக்குப் பிரியமான உபவாசம் எது தெரியுமா? முற்றிலும் வித்தியாசமான நோக்கம் மற்றும் சிந்தையிலிருந்து இந்த உபவாசம் வெளிப்பட வேண்டும். 6-ம் வசனத்தை வாசிப்போம்:

“அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும், சகல நுகத்தடிகளை உடைத்துப் போடுகிறதுமே”

கர்த்தருக்குப் பிரியமான உபவாசமாயிருக்கிறது. தேவனுடைய ஜனங்கள், குறிப்பாக அவர்களுடைய தலைவர்கள், மெய்யான உபவாச ஜெபம் இருக்கும்படி தேவன் கொடுக்கிற இந்த அழைப்பிற்கு கீழ்ப்படியவில்லை என்றால், அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்க முடியாது, நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்க முடியாது, நுகத்தடிகளை உடைக்க முடியாது, ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்க முடியாது. வேதவசனமும், அனுபவமும் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

தேவையிலும் வறுமையிலும் வாழ்பவர்களைக் குறித்தும், ஒடுக்கப்பட்டவர்களைக் குறித்தும் நமக்கிருக்க வேண்டிய சரியான மனநிலையை ஏசாயா தொடர்ந்து எழுதுகிறார். 7-ம் வசனத்தை வாசிப்போம்: “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக் கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமல் இருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.”

உபவாசம் என்பது நம்மைச் சுற்றி வாழ்பவர்களிடத்தில் நாம் எவ்வளவு உண்மையாய் வாழ்கின்றோம் என்பதோடும், குறிப்பாக, பண விஷயத்திலும், பொருள்ரீதியாகவும் தேவையிலுள்ளவர்களுக்கு நாம் எவ்வளவாய் உதவி செய்கிறோம் என்பதோடும் நெருக்கமாய் இணைந்திருக்கிறது.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி. தேவனுக்குப் பிரியமான உபவாச ஜெபத்தைச் செய்யும்படி தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். கட்டுகளை அவிழ்க்கும்படி, ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கும்படி, நுகத்தடிகளை முறிக்கும்படி, பாரங்களை தளர்வுறச் செய்யும்படி நான் இதைச் செய்வேன். சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை, என் மீது அவனுக்கு எந்த வல்லமையும் அதிகாரமுமில்லை. எனக்கு விரோதமாக எவ்விதத்திலும் அவன் உரிமை பாராட்ட முடியாது. காரணம், இயேசுவின் இரத்தம் முழுமையான விலைக்கிரயத்தைச் செலுத்தி தீர்த்திருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன்! ஆமென்.