பிப்ரவரி 24, சிலுவை – இரக்கமற்ற செயல்முறை

சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை; என் மீது அவனுக்கு எந்த வல்லமையும், அதிகாரமுமில்லை; எனக்கு விரோதமாக அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. காரணம், இயேசுவின் இரத்தம் விலைக்கிரயத்தை முழுமையாக செலுத்தி தீர்த்திருக்கிறது!

சிலர் பயத்தோடும், மனச்சோர்வோடும், தனிமையோடும், தவறான இச்சைகளோடும், கோபத்தோடும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல ஆலோசகர் ஓரளவிற்கு வேண்டுமானால் நமக்கு உதவி செய்யலாம். ஆனால் கடைசியில், தீர்வு நம் கையில்தான் இருக்கின்றது. ஆம், சிலுவைதான் நமக்கு ஒரே தீர்வாக இருக்கிறது.

விழுந்துபோன சுபாவம், நமக்குள் எப்பொழுது, எங்கே எழும்புகின்றது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். விடுதலை நமக்கு உண்டாகாதபடி, இரண்டு பொல்லாத ஆவிகள் எப்பொழுதும் கிரியை செய்கின்றன.

ஒரு பொல்லாத ஆவி, இன்னொரு பொல்லாத ஆவி உள்ளே நுழையும்படி கதவைத் திறந்து விடுகின்றது. ஒன்று, சுயபரிதாபம். இன்னொன்று, பொல்லாத கோபம். சுயபரிதாபம் என்பது சாத்தானின் பயங்கரமான, கொடூரமான ஒரு ஆயுதமாக இருக்கின்றது.

பொல்லாத கோபத்திற்கு ஒருவரும் இடம் கொடுக்கக்கூடாது. காரணம், அதினால் உண்டாகக்கூடிய மகா மோசமான விளைவுகளை ஒருவராலும் தங்கிக் கொள்ள முடியாது.

குறிப்பிட்ட சில விஷயங்களில், எவ்வித இரக்கமும், தயவும் காட்டாதவர்களாய் நாம் செயல்பட வேண்டும். சிலுவையில் மரித்தல் என்பது எவ்விதத்திலும் இரக்கமற்ற ஒரு செயல்முறையாக இருக்கின்றது.

அதைக் குறித்து கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு விஷயமும் இல்லை. அதைக் குறித்து இனிமையாக சொல்லக்கூடிய ஒரு விஷயமும் இல்லை. அதைக் குறித்து சௌகரியமாக உணரக்கூடிய ஒரு விஷயமும் இல்லை.

ஆனாலும் நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், அதுதான் நமக்கு விடுதலை உண்டாகக்கூடிய ஒரு வழியாக இருக்கின்றது. அதைத்தான் தேவன் நமக்காக முன்னேற்பாடாக செய்து வைத்திருக்கிறார்.

நமக்குள் ஏதோ ஒரு வகையான பாவம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. நாம் அதற்கு எப்படியோ ஒரு விதத்தில் பழக்கப்பட்டிருக்கிறோம். அது நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விட்டதைப்போல நாம் நினைக்கிறோம்.

அதை வெறுப்பதற்கு நமக்கு கடினமாக இருக்கிறது. காரணம், அது நம்மை நாமே வெறுப்பதுபோல இருக்கிறது. என் அப்பாவின் பிரச்சனைதான், எனக்குள் ஆழமாக வேரூன்றியிருந்த ஒரு பாவமாக இருந்தது.

இது சுவாரசியமான ஒரு விஷயம்தான். பெற்றோர்களிடமிருந்து நிறைய விஷயங்கள், பிள்ளைகளுக்கு வருகின்றன. சில வகையான நடக்கைகளை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். என் அப்பாவுடைய நடத்தை, எனக்குள் நேரடியான தாக்கங்களை நிறையவே உண்டாக்கியிருக்கிறது. என் நடத்தையை அது அதிகமாகவே பாதித்திருக்கிறது.

மெய்யாகவே நம்முடைய பிரச்சனை என்ன என்பதை அடையாளம் காணும்படி, பரிசுத்த ஆவியானவரிடம் நாம் ஜெபிக்க வேண்டும். அவைகளை பெயர் சொல்லி அழையுங்கள். உச்சரிப்பதற்கு நன்றாக இல்லையென்றாலும், அதைச் சொல்லுங்கள்.

அது இச்சை, பொய் சொல்லுதல், தற்பெருமை, அகங்காரம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை பெயர் சொல்லி அழைத்து, நாம் இவ்வாறு அறிக்கை செய்ய வேண்டும்: “என் அகங்காரம் அல்லது தவறான இச்சை அல்லது பொய் சொல்லும் பழக்கம் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.

நான் அதற்கு சிலுவையில் மரித்திருக்கிறேன். எனவே அது என்னை ஆளுகை செய்யும், என் மீது ஆதிக்கம் செலுத்தும்படி நான் இடம் கொடுக்க மாட்டேன். சிலுவையின் மூலம், நான் அதிலிருந்து விடுதலையாகியிருக்கிறேன்.”

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி. என் அகங்காரம் அல்லது தவறான இச்சை அல்லது பொய் சொல்லும் பழக்கம் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் ஏற்கனவே அறையப்பட்டிருக்கிறது. நான் அதற்கு சிலுவையில் ஏற்கனவே மரித்திருக்கிறேன். எனவே அது என்னை ஆளுகை செய்யும்படி, என் மீது ஆதிக்கம் செலுத்தும்படி நான் இடம் கொடுக்க மாட்டேன். சிலுவையின் மூலம், நான் அதிலிருந்து விடுதலையாகியிருக்கிறேன். சாத்தானுக்கு என் வாழ்க்கையில் இம்மியளவும் இடமில்லை, என் மீது அவனுக்கு எந்த வல்லமையும் அதிகாரமுமில்லை. எனக்கு விரோதமாக எவ்விதத்திலும் அவன் உரிமை பாராட்ட முடியாது. காரணம், இயேசுவின் இரத்தம் முழுமையான விலைக்கிரயத்தைச் செலுத்தி தீர்த்திருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன்! ஆமென்.