ஜனவரி 10, வல்லமையான மாற்றம் நமக்குள் நடந்திருக்கிறது

இயேசுவின் இரத்தத்தினால், நான் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன்

கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள் அப்படிச் சொல்லக்கடவர்கள். (சங்கீதம் 107:1-3)

பிசாசின் கொடூரக் கரங்களிலிருந்து தாங்கள் விடுதலையாக்கப்பட்டு, மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை சிலர் அறிந்திருக்கலாம். மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கைக்குள் இயேசு வருவதற்கு முன், நான் எங்கே இருந்தேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதைக் குறித்து எந்தச் சந்தேகமும் எனக்குள் இல்லை. பிசாசின் கொடூரக் கரங்களுக்குள் சிக்கியிருப்பது என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். திரும்பவும் அங்கே இருப்பதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன்.

இயேசுவின் இரத்தமே, பிசாசின் கரத்திலிருந்து என்னை விடுதலையாக்கி, நல்ல மேய்ப்பராகிய இயேசுவின் கரங்களுக்குள் என்னைக் கொண்டு வந்திருக்கிறது என்று வேதவசனம் சொல்கிற சத்தியத்தையும் நான் அறிந்திருக்கிறேன்.

இயேசு தம்முடைய ஜனங்களிடம் இவ்வாறு சொன்னார், “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை” (யோவான் 10:28). இதுதான் பிசாசின் கொடூர கரங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கர்த்தருடைய கரங்களுக்குள் பாதுகாப்பாய் சேர்க்கப்படுவதாகும்.

ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதன் மூலமே, இந்த விடுதலை நமக்கு உண்டாகிறது. இந்த பலனை நாம் அனுபவிக்கிறோம். அது என்ன?

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் அப்படிச் சொல்லக்கடவர்கள்,” என்று வசனம் சொல்கிறது. நாமும் அப்படிச் சொல்லும்போது மட்டுமே, இந்த நன்மைகள் நமக்கு உண்டாகிறது.

நீங்கள் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அப்படிச் சொல்லுங்கள்! நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்றால், உங்களுடைய மீட்பின் பலன் உங்களுக்கு உண்டாகாது. உங்களுடைய அறிக்கையின் வார்த்தைகள்தான், இயேசுவினுடைய இரத்தத்தின் வல்லமை உங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறது.  

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. அவருடைய இரத்தத்தினால், பிசாசின் கொடூரக் கரங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கர்த்தருடைய கரங்களுக்குள் பத்திரமாக சேர்க்கப்பட்டிருக்கிறேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். இயேசுவின் இரத்தத்தினால், நான் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன். ஆமென்.