ஜனவரி 13, அவரால் உருவாக்கப்பட்டோம், அவரால் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறோம்

இயேசுவின் இரத்தத்தினால், நான் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன்

மரத்தில் அழகான, சிறந்த வேலைப்பாடுகளைச் செய்யக்கூடிய கைவினைஞர்களுக்கு ஒரு உவமையை ஒருமுறை நான் சொன்னேன். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்கும்படி, இயேசு செலுத்திய விலைக்கிரயத்தை விளக்கிக் காண்பிக்கும்படி இந்த உவமையை நான் சொல்வதுண்டு.

மரத்தினால் ஆன, ஒரு அழகான சிறிய படகை ஒரு சிறுவன் தன் கைகளாலேயே செய்தான். ஒரு நாள் அவன் அதை எடுத்துக் கொண்டு, கடலுக்குச் சென்றான். ஆனால் காற்று பலமாக வீசி, அவனுடைய படகை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.

அவனால் அவனுடைய படகை மீட்க முடியவில்லை. தன் படகு இல்லாமலே அவன் வீடு சென்று சேர்ந்தான்.

அடுத்ததாக எழும்பிய பெரிய அலை, அந்தப் படகை திரும்பவும் கரை கொண்டு வந்து சேர்த்தது. கடற்கரையின் வழியாக நடந்து சென்ற ஒரு மனுஷன் அதைக் கண்டுபிடித்தான். அவன் அந்தப் படகைப் பார்த்தான்.

அது அவ்வளவு அழகாகச் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தான். ஆகையால் அவன் அதை ஒரு கடைக்காரரிடம் விலைக்கு விற்று விட்டான். அந்தக் கடைக்காரன் அதை சுத்தம் செய்து, நல்ல விலைக்கு விற்கும்படி, தன் கடையில் வைத்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் அந்தக் கடையின் வழியாகக் கடந்து சென்றான். அப்பொழுது அவன் தன் படகை அந்தக் கடையில் பார்த்தான். அது தன்னுடையதுதான் என்பதை அவன் உடனடியாக அறிந்து கொண்டான்.

ஆனால் அதை நிரூபிப்பதற்கு அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் அவன் அதை திரும்பவும் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான். அதற்கு ஒரு விலையை அவன் கொடுத்தாக வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

பணம் சம்பாதிக்கும்படி அவன் வேலை செய்ய ஆரம்பித்தான். கார்களைக் கழுவினான்; புல்வெளிகளை சுத்தம் செய்தான். இன்னும் பற்பல வேலைகளை அவன் செய்தான். கடைசியில், போதுமான அளவு பணத்தை அவன் சேர்த்தான்.

அவன் அந்தக் கடைக்குச் சென்றான். தன் படகை விலை கொடுத்து வாங்கி, தன்னுடையதாக்கிக் கொண்டான். அப்பொழுது அவன் தன் படகை தன் கைகளில் எடுத்து, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “இப்பொழுது நீ எனக்குச் சொந்தம்!

நானே உன்னை உருவாக்கினேன். இப்பொழுது நானே உன்னைத் திரும்பவும் விலை கொடுத்து வாங்கி, எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டேன்,” என்று சொன்னான்.

அந்தப் படகாக, இப்பொழுது உங்களையே நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்களை எவ்விதத் தகுதியும் இல்லாத ஒரு நபராக நினைத்துக் கொண்டிருக்கலாம். எல்லாக் குறைவுகளும் ஒட்டுமொத்தமாக உங்களிடம் குவிந்து கிடப்பதைப்போல நீங்கள் உணரலாம்.

மெய்யாகவே தேவன் உங்களை நேசிக்கிறாரா என்று நீங்கள் குழம்பிப் போயிருக்கலாம். ஆனால் இப்பொழுது கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்கிறார், “நானே உன்னை உருவாக்கினேன்.

நானே உன்னை விலை கொடுத்து வாங்கியுமிருக்கிறேன். நீ எனக்கு இரட்டிப்பான விதத்தில் சொந்தமானவன். நீ முழுவதும் எனக்குச் சொந்தமானவன் / சொந்தமானவள்.”  

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. கர்த்தரே என்னை உருவாக்கினார்; அவரே என்னை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார், நான் முழுவதும் அவருக்குச் சொந்தமானவன் என்று நான் அறிக்கை செய்கிறேன். இயேசுவின் இரத்தத்தினால், நான் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன். ஆமென்.