ஜனவரி 20, நம்முடைய பாவத்தை ஏற்றுக் கொண்டு, மனந்திரும்ப வேண்டும்

சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம், என்னுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கின்றன

32-ம் சங்கீதத்தில், ராஜாவாகிய தாவீது தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து எழுதுகிறான்:

நான் அடக்கி வைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என் மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் (பெலன்) உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று.

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். “என் மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்,” என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை (தண்டனையை) மன்னித்தீர். (3-5 வசனங்கள்)

தாவீது இதை எழுதியபோது, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுடன் அவன் செய்த பாவத்தை நினைவுகூர்ந்தவனாய் எழுதினான் என்று நான் விசுவாசிக்கிறேன்.

இது பயங்கரமான ஒரு பாவச் செயலாய் இருந்தது. தாவீது இன்னொருவனுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டு, மிகவும் பயங்கரமான ஒரு பாவத்தைச் செய்தான்.

இன்னும் ஒரு படி கீழே இறங்கி, தன் பாவத்தை மறைக்கும்படி, அவன் ஒரு கொலையும் செய்தான். நம்மில் பலரைப்போலத்தான், தாவீதும் செயல்பட்டான். அவன் தன்னுடைய பாவத்தைக் குறித்த உண்மையை எதிர்கொள்ள மறுத்தான். அவன் அதைக் கண்டும் காணாததைப்போல இருக்கும்படி நீண்ட நாட்கள் முயற்சித்தான்.

அடுத்த வசனங்களில், தன் பாவத்திலிருந்து தனக்குக் கிடைத்த விடுதலையைக் குறித்து தாவீது எழுதுகிறான். 

இதற்காக சகாயம் (உதவி) கிடைக்கும் காலத்தில் பக்தியுள்ளவன் எவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான். அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும், அது அவனை அணுகாது. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.

என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் (விடுதலையின் பாடல்கள்) என்னைச் சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். (6-7 வசனங்கள்)

நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்வதற்கு காலம் கடந்து விட்டதே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இப்பொழுதே அவருடைய இரட்சிப்பிற்குள் தஞ்சம் புகுந்திடுங்கள்.

நம்முடைய பாவங்களை ஒத்துக் கொண்டு, அவற்றிலிருந்து மனந்திரும்புவோம் என்றால், நிச்சயம், நம்முடைய பாவங்களிலிருந்து தேவன் நம்மை விடுதலையாக்குவார்.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. இயேசுவின் இரத்தத்தின் மூலமாக, என்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. இதுவரை நான் மறைக்க முயற்சித்திருந்த பாவங்களை நான் அறிக்கை செய்கிறேன். என் பாவங்களை எனக்கு மன்னியும். ஆபத்திலிருந்து என்னை காத்துக் கொள்ளும். இரட்சிப்பின் சந்தோஷத்தினால் என்னை நிரப்பும். ஆமென்.