ஜனவரி 21, நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதற்கு சாட்சியாய் வாழ வேண்டும்

சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம், என்னுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கின்றன

அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7)

இயேசுவின் இரத்தத்தைக் குறித்து தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிற இந்த வாக்கியத்தைப் பாருங்கள். உங்களுடைய தனிப்பட்ட சாட்சி எனும் ஈசோப்பைக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையின் சூழ்நிலைக்கும், தேவைக்கும் இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நான் காண்பிக்கிறேன்.

கிறிஸ்துவுக்குள் நாம் வாழும்போது, இயேசுவின் இரத்தத்தின் மூலம் நமக்கு உண்டாயிருக்கிற இரண்டு நன்மைகளைக் குறித்து இவ்வசனம் நமக்குச் சொல்கிறது. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் கிறிஸ்துவுக்கு வெளியே வாழ்வோம் என்றால், இந்தப் பலன்கள் நமக்குக் கிடைக்காது. எகிப்தில் நிகழ்ந்த முதல் பஸ்காவின் போது, தங்களுடைய வீடுகளுக்கு வெளியே இருந்தவர்களை இந்த இரத்தம் பாதுகாக்கவில்லை.

இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுடைய வீடுகளுக்குள் இருந்தபோதுதான், அவர்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டார்கள். அதேபோலத்தான் கிறிஸ்துவுக்குள் வாழும்போது மட்டுமே, நமக்கு மீட்பும், பாவ மன்னிப்பும் உண்டாயிருக்கிறது.

 

மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற வசனத்தை நான் மனப்பாடமாக அறிந்திருக்கிறேன். இருள் சூழ்ந்த ஒரு இரவில், இருட்டான ஒரு அறையின் மூலையில், தலைகீழாக நின்றாலும், இந்த வசனத்தை என்னால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அப்படியே சொல்ல முடியும். நான் இந்த வசனத்தின்படியே வாழ்கின்றேன். என் ஈசோப்பை நான் என் கையில் பிடித்திருக்கிறேன். என்னை நம்புங்கள், என் தனிப்பட்ட வாழ்க்கையில், பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நான் இந்த ஈசோப்பை பயன்படுத்தியிருக்கிறேன். இது வேலை செய்கிறது என்பதையும் நான் கண்டுபிடித்திருக்கிறேன்.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. இயேசுவின் இரத்தத்தின் மூலம், என்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. என் தனிப்பட்ட சாட்சி எனும் ஈசோப்பினால் இதை நான் பயன்படுத்துகிறேன். அவருடைய இரத்தத்தினால், எனக்கு மீட்பும், பாவமன்னிப்பும் உண்டாயிருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆமென்.