ஜனவரி 23, சுத்திகரிப்பின் கிரியை, இங்கே இப்பொழுதே நமக்குள் நடக்கின்றது

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி, நம்மைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது

என்னுடைய தனிப்பட்ட சாட்சியாக இதைச் சொல்கிறேன்: “நான் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்கும்போது, இயேசுவின் இரத்தம், எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை தொடர்ந்து, சுத்திகரித்துக் கொண்டே இருக்கிறது.

இது இப்பொழுது எனக்குள் நடக்கின்றது.” இதை நான் திரும்பவும் சொல்கிறேன்: “இயேசுவின் இரத்தம் இப்பொழுது என்னைச் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது.” இது ஏதோ தெளிவற்ற நிலையில், பொதுவாகச் சொல்கிற ஒரு அறிக்கை கிடையாது.

இது இப்பொழுது எனக்குள் நடக்கின்ற ஒரு கிரியையைக் குறித்த அறிக்கையாக இருக்கிறது. இது எனக்காக, எனக்குள், இப்பொழுது இங்கே நடக்கின்றது. அது மட்டுமல்ல, இது தொடர்ந்து நடக்கும். இந்தக் கிரியைக்கு முடிவே இல்லை. எதிர்காலத்திலும் இது தொடரும்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஸ்வாஹிலி எனும் மொழியில், நிரந்தரமான – முழுமையான காரியங்களைக் குறிப்பதற்கு ஒரு விசேஷமான வினைத்தொகை பயன்படுத்தப்படுகிறது.

“இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவத்திலிருந்தும் சுத்திகரிக்கிறது,” என்ற ஒரு பாடல் உண்டு. அவர்கள் இதை இவ்வாறு பாடுவார்கள்: “இயேசுவின் இரத்தம் நம்மை முற்றிலுமாய், முழுவதுமாய், குறைவுகளற்ற விதத்தில், பூரணமாய் சுத்திகரிக்கின்றது.”

இந்த வரிகள் என்னை மிகவும் ஆழமாய் பாதித்தன. காரணம், இவை அவ்வளவு நிறைவாய் இதை எடுத்துச் சொல்கின்றன. ஆகையால் இது தொடர்ந்து, பூரணமாய் நமக்குள் நடக்கின்றது என்ற வெளிச்சத்தில் இந்த அறிக்கையை நாம் செய்ய வேண்டும்.

இந்த சத்தியத்தைக் குறித்த ஒரு அழகான வருணனை 51-ம் சங்கீதத்தில் காணப்படுகிறது. தாவீது தன் பாவத்திற்காக மனம் வருந்தி, அதிலிருந்து மனந்திரும்பி எழுதிய மிக முக்கியமான ஒரு சங்கீதமாய் இது இருக்கிறது.

அவன் இன்னொருவனுடைய மனைவியுடன் தவறான பாலியல் உறவு கொண்டு பாவம் செய்தான்; தன் பாவத்தை மறைக்கும்படி, அவனைக் கொலை செய்தான். இந்த நிலையில், தேவனிடம் மனந்திரும்பியவனாய் தாவீது இந்த சங்கீதத்தை எழுதினான்.

இது மிகவும் அழகான சங்கீதங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை நாம் அடிக்கடி வாசிக்கின்றோம், இதை நம் ஜெபமாகவும் செய்கின்றோம். சங்கீதங்களை என் ஜெபங்களாய் நான் செய்வதுண்டு. அதை நான் விசுவாசிக்கின்றேன்.

சங்கீதங்களை நான் வெறுமனே வாசிப்பதில்லை. நான் அவைகளை என் ஜெபங்களாய் செய்கின்றேன்.

 

 

சங்கீதம் 51:7-ஐ வாசிப்போம்: “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும். அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும். அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”

தாவீது இங்கு ஈசோப்பைக் குறித்துப் பேசுவதை கவனியுங்கள். ஈசோப், நான் இருக்கிற இடத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகின்றது. இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்படுவதைக் குறித்த அழகான, தீர்க்கதரிசன முன்னோட்டமாய் இது இருக்கிறது.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் சகல பாவங்களையும் நீக்கி, என்னைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது. ஆம், அவருடைய இரத்தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் தொடர்ந்து என்னை சுத்திகரித்துக் கொண்டே இருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆமென்.