ஜனவரி 24, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யுங்கள்

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி, நம்மைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது

இயேசுவின் இரத்தத்தைக் குறித்துப் பேசுகிற 1 யோவான் 1:7-ம் வசனத்தை நாம் திரும்பவும் வாசிப்போம், இதைக் கூர்ந்து நோக்குவோம்: “அவர் (இயேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.”

ஒளியில் நடத்தல், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருத்தல் மற்றும் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுதல் என்ற இந்த மூன்று விஷயங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன, தேவனுடைய வார்த்தையில் ஒன்றாய் இசைந்து கட்டப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இரத்தத்தினால் உண்டாகிற சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பைக் குறித்து நிறைய பேர் உரிமை பாராட்டுகிறார்கள். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமையை அவர்களுக்குக் கொடுக்கின்ற நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்வதில்லை.

இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுதல் என்பது ஒரு நிபந்தனைக்குட்பட்டதாய் இருக்கிறது. அதாவது ஒரு நிபந்தனையைப் பூர்த்தி செய்வதன் தொடர்ச்சியாக உண்டாகக்கூடிய ஒரு நன்மையாய் இது இருக்கிறது. இதில் அடிப்படையான நிபந்தனை இதுதான்: நம் கர்த்தராகிய இயேசு ஒளியில் இருப்பதுபோல, நாமும் ஒளியில் நடக்க வேண்டும்.

அப்பொழுது ஒன்றல்ல, இரண்டு நன்மைகள் அதன் விளைவாக உண்டாகின்றன. இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகிற சுத்திகரிப்பு, இரண்டாவது நன்மையாக இருக்கிறது. ஆனால் முதல் நன்மை,  நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொண்டிருப்போம் என்பதுதான்.

நாம் ஒருவரோடொருவர் ஐக்கீயம் கொண்டிருக்காவிட்டால், நாம் ஒளியில் நடக்கவில்லை என்பதற்கு அதுவே ஆதாரமாக இருக்கிறது. நாம் ஒளியில் நடக்கவில்லை என்றால், இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகிற சுத்திகரிப்பை நாம் உரிமை பாராட்ட முடியாது.

ஆகையால் ஒரு முடிவுக்கு நிச்சயமாய் நாம் வர முடியும்: நாம் ஐக்கியத்தை விட்டு வெளியே இருக்கிறோம் என்றால், நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்று அர்த்தம். நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்றால், இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்காது.

வெளிச்சத்தில் நடக்கும்போது மட்டுமே, இயேசுவின் இரத்தம் நம்மை சுத்திகரிக்கின்றது. இது நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு கோட்பாடாக இருக்கிறது.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் சகல பாவங்களையும் நீக்கி, என்னைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது. இயேசு ஒளியில் இருக்கிறதுபோல, நானும் ஒளியில் நடக்க வேண்டும் என்று முழு இருதயத்தோடு தீர்மானிக்கிறேன். அதன் மூலம், மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியத்தில் முழுமையாக நான் நுழைந்திடுவேன். இயேசுவின் இரத்தத்தினால் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவேன். ஆமென்.