ஜனவரி 26, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், உண்மையாய் வாழ வேண்டும்

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி, நம்மைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது

ஐக்கியம் என்பது, நாம் வெளிச்சத்தில் நடக்கிறோமா, இல்லையா என்பதை சோதிக்கும் முதல் சோதனையாக இருக்கின்றது.

நம் கர்த்தருடனும், நம் சக விசுவாசிகளுடனும் ஐக்கியத்தை நாம் சந்தோஷமாய் அனுபவிக்கவில்லை என்றால், நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்று அர்த்தம். நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்றால், இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்காது.

இப்பொழுது, நாம் எவ்வாறு வெளிச்சத்தில் நடக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கின்றது. தேவனுடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் முதல் நிபந்தனையாகும். “உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது,” என்று சங்கீதம் 119:105 சொல்கிறது. இரண்டாவது நிபந்தனையை பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்.

எபேசியர் 4:15-ஐ வாசிப்போம்: “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு (பேசி), தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும் படியாக அப்படிச் செய்தார்.”

இந்த வசனத்தில், “வெளிச்சத்தில் நடப்பதைக்” குறித்து எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது? நம் சக விசுவாசிகளுடன் அன்பிலும், உண்மையிலும் நடந்து கொள்வதை, வெளிச்சத்தில் நடக்கின்ற வாழ்க்கைமுறையாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நம் உறவுகளில், நாம் ஒருவரோடொருவர் உண்மையாய் வாழ வேண்டும். அதை நாம் அன்பின் நிமித்தம் செய்ய வேண்டும்.

ஆகையால் வெளிச்சத்தில் நடக்கின்ற வாழ்க்கையில், இரண்டு விஷயங்கள் ஒன்றாய் சேர்ந்து நடக்கின்றன. ஒன்று, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற வாழ்க்கைமுறை. இரண்டாவது, நம் சக விசுவாசிகளிடம் அன்பிலும், உண்மையிலும் நடக்கின்ற வாழ்க்கைமுறை. நாம் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்போது, இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கின்றது என்பதை முழு நிச்சயத்தோடு நம்மால் சொல்ல முடியும்.

நம்முடைய சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக மாசுபட்டிருக்கிறது என்பதை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஆவிக்குரிய சூழலும் பாவம், துன்மார்க்கமான கிரியைகள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகளால் மிகவும் மோசமாக மாசுபட்டிருக்கிறது.

இதிலிருந்து சுத்தமாக பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இயேசுவின் இரத்தம் நம்மை எப்பொழுதும் சுத்திகரிக்கும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு அது அத்தியாவசியமானதாக இருக்கிறது.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் சகல பாவங்களையும் நீக்கி, என்னைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது என்று தேவனுடைய வார்த்தை சொல்கிறது. அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும்படி, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்; மற்றவர்களோடு சீர்பொருந்தின உறவில் வாழும்படி தீர்மானிக்கிறேன். ஆமென்.