ஜனவரி 29, தேவநீதியைக் குறித்த பசியும், தாகமும் உள்ளவர்களாயிருங்கள்

இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன், ஒருபோதும் பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

நீதிமானாக்கப்படுதல் என்ற வார்த்தை, ஒரு கடினமான இறையியல் வார்த்தையாக இருக்கின்றது. இதன் மெய்யான அர்த்தம் பெரும்பாலும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.

முதலில், நாம் இந்த வார்த்தையைப் பார்ப்போம். பிறகு நான் இதன் அர்த்தத்தை விளக்கிக் காண்பிக்கும்படி முயற்சிக்கின்றேன். தேவநீதி தான், ரோமர் நிருபத்தின் மையக்கருவாக இருக்கிறது. “மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?” என்ற கேள்வியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யோபு எழுப்பியிருந்தான் (யோபு 25:4).

இதற்கு தேவன் தரும் பதிலை, ரோமர் நிருபம் நமக்குக் கொடுக்கின்றது. தேவ நீதியைக் குறித்து அறிந்து கொள்வதில் நாம் ஆர்வமாய் இருப்போம் என்றால், ரோமர் நிருபத்தை வாசிப்பதில் நாம் ஆர்வமுள்ளவர்களாய் இருப்போம்.

மத்தேயு 5:6-ல், இயேசு இவ்வாறு சொன்னார்: “நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.” சுகம் மற்றும் செழிப்பைக் குறித்து பசி தாகமுள்ளவர்களாய் நாம் இருப்போம் என்றால், நாம் ஆசீர்வதிக்கப்படாமல் போவோம்.

மாறாக, நாம் தேவநீதியைக் குறித்து பசி தாகமுள்ளவர்களாய் மாறுவோம் என்றால், நாம் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவோம்.

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:9)

அவருடைய இரத்தத்தினால் நாம் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறோம் என்று இவ்வசனம் சொல்வதைக் கவனியுங்கள். எபிரெய மொழியிலும், கிரேக்க மொழியிலும், ஒரு வார்த்தை, ஒன்று நிரபராதி என்று மொழிபெயர்க்கப்படுகிறது அல்லது நீதிமான் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

எபிரெய மொழியில், “சடாக் (tsadaq)” என்றும், கிரேக்க மொழியில், “டைக்கையூ (dikaioõ)” என்றும் அவ்வார்த்தை வருகின்றது. ஆனால் அது எப்படி மொழிபெயர்க்கப்பட்டாலும், அதற்கு ஒரே அர்த்தம்தான். ஆங்கிலத்தில், ‘நிரபராதி’ என்ற வார்த்தையை சட்டத்தின் விதிமுறைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்றோம்.

ஆனால் நீதி அல்லது நீதிமான் என்ற வார்த்தையை குணநலன்கள் மற்றும் நடத்தையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றோம்.

ஆனால் வேதாகமத்தின் மொழியில், இந்த வேறுபாடு இல்லை. “அவருடைய இரத்தத்தினால் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறோம்,” என்பதற்கும், “அவருடைய இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம்,” என்பதற்கும் ஒரே அர்த்தம்தான்.

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன், ஒருபோதும் பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். தேவ நீதியின் மீதும், அவருடைய இரத்தத்தினால் நிரபராதியாக்கப்படுவதன் மீதும் பசியும் தாகமும் கொண்டவனாய், அவற்றின் மீது வாஞ்சையுள்ளவனாய் நான் இருக்கிறேன். ஆமென்.