ஜீலை 07, ஆவிக்குரிய கனி

நான் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறேன்; நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன்

தேவனை ஆராதித்து, அவரை தொழுதுகொள்வதன் மூலம், நாம் கர்த்தரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டு, ஒரே ஆவியாய் இருக்கின்றோம். ஆகையால்தான், ஆராதனை என்பது, மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய உயரிய ஒரே செயலாய் இருக்கின்றது.

அது மட்டுமல்ல, ஆராதனையில் நாம் கர்த்தரோடு ஒன்றாய் இணைந்திருக்கும்போது, தேவன் விரும்புகிற கனிகளை நாம் கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.

அதாவது தேவன் விரும்புகிற காரியங்களை, நாம் பெற்றெடுக்க ஆரம்பிக்கின்றோம். ஆராதனை என்பது கிறிஸ்தவ ஜீவியத்தின் கூடுதல் இணைப்பு கிடையாது. அது நாம் செய்ய வேண்டிய பணிகளுடன், கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒரு சிறிய பணி கிடையாது.

அதுதான் நிறைவு. நம் கிறிஸ்தவ ஜீவியத்தின் நோக்கமே, அதில்தான் பூர்த்தியாகின்றது, அதில்தான் நிறைவடைகின்றது.

அது நம் கிறிஸ்தவ ஜீவியத்தை உறுதிப்படுத்துகிற ஒன்றாயிருக்கிறது. நான் அதை திரும்ப இவ்வாறு சொல்ல விரும்புகிறேன். யாரும் இடறலடைய வேண்டாம். அது கர்த்தரோடு நமக்கு நடந்திருக்கிற திருமண உறவின் கனியாக இருக்கின்றது.

நாம் அவரோடு ஒரே ஆவியாய், ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்தத் திருமண உறவில் இசைந்தவர்களாய் இணைக்கப்பட்டிருக்கும்போது, அங்கே கரு அல்லது கனி உண்டாகிறது.

இந்தக் கணத்தில்தான், நம்முடைய வாழ்க்கையின் ஆவிக்குரிய கனி வெளிப்படுகிறது. நீங்கள் யாருடன் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறீர்களோ, அந்தக் கணவருடைய அடையாளத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கலாத்தியர் 5:19-21 வசனங்களில், பவுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன.

அவையாவன: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே.

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை யென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்கிறேன்.” மாம்சத்தின் கிரியைகள் அனைத்தும் வெளியரங்கமாயிருக்கின்றன.

நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்று மற்றவர்களிடம் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் மாம்சத்திற்குரியவராய் வாழ்வீர்கள் என்றால், அது நிச்சயம்
வெளியரங்கமாய் வெளிப்படும். உங்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன்.

கலாத்தியர் நிருபத்தின் இவ்வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, உங்களுடைய பிள்ளைகள் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? காரணம், மாம்சம் அதைத்தான் பிறப்பிக்கின்றது. இந்தப் பட்டியலில், ஒரு நல்ல விஷயத்தைக் கூட உங்களால் பார்க்க முடியாது.

தேவனுக்குப் பிரியமான எதையும் மாம்சத்தினால் செய்ய முடியாது. அது சீர்கேடுகள் நிறைந்ததாய் இருக்கிறது. மத்தேயு 7:18-ல், இயேசு என்ன சொல்கிறார் என்று
கவனியுங்கள். “கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது.” அதற்கு சாத்தியமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தராகிய இயேசுவே, என்னை உம்மோடு ஒன்றாய் இணைத்துக் கொண்டீர். உமக்கு நன்றி. ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான், தேவனோடு நான் ஒன்றாய் இணைக்கப்பட்டதன் இலக்காய் இருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறேன் என்றும், நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன். ஆமென்.