ஜீலை 12, என்றென்றைக்கும் நாம் அவருக்கே சொந்தமானவர்கள்

நான் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறேன்; நான் தேவனுக்குச் சொந்தமானவன்

உங்களை திரும்பவும் தமக்குச் சொந்தமாக வாங்கிக் கொள்ளும்படி, இயேசு தம்மிடமிருந்த எல்லாவற்றையும் விலைக்கிரயமாகக் கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் கர்த்தராய் இருந்தாலும், அவர் தம்முடைய எல்லா அதிகாரங்கள் மற்றும் வல்லமையை ஒதுக்கி வைத்து விட்டு, முழுமையான தரித்திரத்தில் மரித்தார். அப்பொழுது அவரிடம் ஒன்றுமில்லை.

அவர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையும், அடக்க ஆடைகளும் கடனாக வாங்கப்பட்டிருந்தன. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே.

அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
(2 கொரிந்தியர் 8:9)

ஒருவேளை, நீங்கள் உங்களை முக்கியமானவர்களாக ஒருபோதும் பார்க்காமல் இருந்திருக்கலாம். மிகவும் குறைவுபட்ட, உங்களைக் குறித்து மிகவும் குறைவான மதிப்பை உடைய ஒரு படம் உங்களுக்குள் இருந்திருக்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, அது வலிவேதனைகளாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்ததாய் இருந்திருக்கலாம்.

நியாயமாய் கிடைக்க வேண்டிய உரிமைகள் உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். உங்களுடைய சிறுவயது வாழ்க்கை, சந்தோஷமற்றதாக இருந்திருக்கலாம். திருமணம், விவாகரத்தில் முடிந்திருக்கலாம். மதுவிலும், போதை மருந்துப் பழக்கத்திலும் பல வருடங்கள் வீணடிக்கப்பட்டிருக்கலாம்.

உங்களுடைய வேலையில் அல்லது தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையாமல் இருந்திருக்கலாம், பெருத்த நஷ்டம் உண்டாயிருக்கலாம்.

உங்களுடைய கடந்த காலமும், எதிர்காலமும் தோல்வியின் பிம்பத்தை உங்கள் முன் நிறுத்தியிருக்கலாம்! ஆனால் இயேசுவுக்கு அப்படி இல்லை! அவர் உங்களை மிகவும் அதிகமாய் நேசிக்கிறார்.

உங்களை மீட்டு, தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் தம்மிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய அழகிய வார்த்தைகளை உங்களுக்கு உரியதாய் ஆக்கிக் கொண்டு, அதை அறிக்கை செய்யுங்கள்: “தேவனுடைய குமாரனாகிய இயேசு, என்னில் அன்புகூர்ந்து, எனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 2:20).

இதைத் திரும்பவும் சொல்லுங்கள்: “தேவன் என்னில் அன்புகூர்ந்து, எனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” திரும்பவும் சொல்லுங்கள்: “தேவனுடைய குமாரனாகிய இயேசு, என்னில் அன்புகூர்ந்து, எனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.”

ஆணிகளால் அறையப்பட்டதால் உண்டான காயம், இயேசுவின் கரங்களில் இருக்கிறது. அந்தக் கரங்களில், நீங்கள் விலையேறப்பெற்ற முத்தாக இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களை அப்படிப் பாருங்கள்.

அவர் உங்களைப் பார்த்து சொல்கிற வார்த்தைகளை கவனமாய் செவிகொடுத்துக் கேளுங்கள்: “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்! என்னிடமிருந்த எல்லாவற்றையும் உனக்காக நான் விலையாகக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் நான் அதைக் குறித்து வருத்தப்படவில்லை. என்றென்றும் நீ எனக்கே சொந்தம்!” பாருங்கள், நீங்கள் எதைச் செய்தாலும் இதைச் சம்பாதிக்க முடியாது. உங்களை நீங்கள் ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களையே நீங்கள் நல்லவராக மாற்றி விட முடியாது.

நீங்கள் செய்யக்கூடியதெல்லாம், இயேசு உங்களுக்காக என்ன செய்திருக்கிறாரோ, அதை ஏற்றுக் கொண்டு, அதற்காக அவருக்கு நன்றி சொல்வதே ஆகும்! நீங்கள் என்றென்றைக்கும் அவருக்கே சொந்தமானவர்கள்!

கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை விலைக்கிரயம் செலுத்தி வாங்கியிருக்கிறீர். உமக்கு நன்றி. இயேசு என்னை நேசித்தார்; எனக்காக தம்மையே ஒப்புக் கொடுத்தார்; எனவே என்றென்றைக்கும் நான் அவருக்கே சொந்தம் என்று அறிக்கை செய்கிறேன். நான் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறேன்; ஆகையால் நான் தேவனுக்குச் சொந்தமானவன் என்றும் அறிக்கை செய்கிறேன். ஆமென்.