ஜீலை 16, நம்முடைய இடத்தைக் கண்டறிதல்

கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் நான் இருக்கிறேன்

நீதிமொழிகள் 27:8 சொல்கிறது, “தன் கூட்டை விட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.”

தன் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு, திரும்பவும் தன் கூட்டிற்குத் திரும்ப முடியாமல் அலைகின்ற பறவையை எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதைக் காட்டிலும் மிகவும் பெலவீனமான, மிகவும் பரிதாபமான ஒரு விஷயம் வேறு எதுவும் இல்லை.

நீங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டு வெளியே இருப்பதால் உண்டாகக்கூடிய நிலையைத்தான் இந்தப் படம் மிகவும் பொருத்தமாகச் சித்தரிக்கின்றது. நான் பலருக்கு ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறேன்.

நான் அவர்களிடம் எளிமையாகச் சொல்வது இதுதான், “உங்களுடைய பிரச்சனை இதுதான். நீங்கள் உங்களுக்குரிய இடத்தில் இல்லை என்பதுதான் அது. இது நீங்கள் இருக்க வேண்டிய இடம் அல்ல.

உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டறியும்வரை, நீங்கள் ஒருபோதும் சந்தோஷமாக, உற்சாகமாக வாழப் போவதில்லை.”

“உங்களுடைய இடம்” என்பது, பிரதானமாக, பூகோளரீதியான ஒரு இடத்தைக் குறிக்கவில்லை. இது தேவனுக்குள், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உங்களுக்கென்று முன்குறிக்கப்பட்ட இடத்தைக் குறிக்கின்றது.

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒரு அங்கமாக இருக்கின்றோம்
என்று வேதவசனம் சொல்கிறது.

ஒரு அங்கமாய், நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய அந்தச் சரியான இடத்தில் பொருந்த வேண்டும். ஒரு கால் இருக்க வேண்டிய இடத்தில், கை இருந்தால், அது கேலிக்குரிய விஷயமாயிருக்கும்.

ஒரு கை இருக்க வேண்டிய இடத்தில், ஒரு கால் இருந்தாலும், அதுவும் ஒரு கேலிக்குரிய விஷயமாயிருக்கும்.

ஒரு அங்கமாய் நீங்கள் எங்கே இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கென்று முன் குறிக்கப்பட்ட இடத்திற்குள் நீங்கள் மிகச் சரியாக பொருந்தி விடுவீர்கள்.

அவர் (தேவன்) நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலம் முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். (2 தீமோத்தேயு 1:9)

இது ஒரு வல்லமையான வேதவசனமாகும்.

இதன் ஆழம், கிட்டத்தட்ட கண்டறிய முடியாததாய் இருக்கிறது. தேவன் நம்மை இரட்சித்தார் என்று இது சொல்கிறது.

ஆனால் இது அங்கேயே முடிந்து விடவில்லை. அங்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. பவுல் உடனடியாக, ”தேவன் நம்மை அழைத்தார்” என்றும் இங்கு தொடர்ந்து சொல்கிறார்.

அப்படியென்றால், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றால், அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். ஆகையால் இரட்சிக்கப்பட்டு, ஆனால் அழைக்கப்படாதவர் என்று எவருமில்லை.

இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தங்களுடைய அழைப்பை அறியாதிருக்கிறார்கள் என்ற நிலையில், எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு கிறிஸ்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அழைக்கப்படவில்லை என்பது அதற்குக் காரணம் அல்ல. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், ஒரு அழைப்பிற்காகவே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எனவே உங்களுடைய அழைப்பைக் கண்டறிந்து, அதை நிறைவேற்றாதவரை, நீங்கள் விரக்தியாய், குறைவுபட்ட ஒரு நிலையில்தான் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்.

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் என்னை உருவாக்கியிருக்கிறீர். உமக்கு நன்றி. உமக்குள் என்னுடைய இடத்தையும், என்னுடைய அழைப்பையும் நான் கண்டறிய எனக்கு உதவும். நான் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் இருக்கிறேன். ஆமென்.