ஜீலை 18, எனக்குரிய இடம்

கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் நான் இருக்கிறேன்

“கடுகு விதையளவு விசுவாசம்” நமக்குள் இருந்தால், நம்மால் ஒரு மலையையே இடம் பெயரச் செய்ய முடியும் என்று மத்தேயு 17:20-ல், இயேசு சொல்லியிருக்கிறார்.

இது உங்களுடைய விசுவாசத்தின் அளவில் அல்ல, அதன் தரத்தில்தான் விஷயம் இருக்கிறது. தேவனிடத்தில் தாழ்மையாய் தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கு விசுவாசம் கொடுக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட அளவு விசுவாசத்தை தேவன் ஏன் உங்களுக்குக் கொடுக்க வேண்டும்? (ரோமர் 12:3). காரணம், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில், தேவன் உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை வைத்திருக்கிறார்.

கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும்படி அவர் உங்களை முன் குறித்திருக்கிறார்.

சரீரத்தில், உங்களுக்குரிய இடத்திற்கேற்றபடி, அந்த விசுவாசத்தை வடிவமைத்து, அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒரு கையாய் செயல்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்றால், அவர் உங்களுக்கு ஒரு “கை”க்குரிய விசுவாசத்தைக் கொடுப்பார்.

நீங்கள் ஒரு காதாக இருந்து செயல்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்றால், ஒரு “காது”க்குரிய விசுவாசத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

ஆனால் நீங்கள் ஒரு காலாய் இருந்து, மூக்காய் செயல்படும்படி முயற்சிக்கின்றீர்கள் என்றால், அங்கே நீங்கள் செய்ய முயற்சிக்கிற விஷயத்திற்கும், உங்களுக்குள் இருக்கும் விசுவாசத்திற்கும் இடையே முர்ற்றிலும் சமனற்ற ஒரு நிலை உண்டாகி விடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குள் போதுமான விசுவாசம் இல்லை என்பதல்ல இங்கு பிரச்சனை.

மாறாக, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை, அது எதற்காக கொடுக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமால், வேறொன்றிற்காக பயன்படுத்தும்படி முயற்சிப்பதே பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

விசுவாசிகளின் சரீரமாகிய சபையில் உங்களுக்குரிய இடத்திற்காகவும், நீங்கள் செய்ய வேண்டிய பணிக்காகவும் அது
கொடுக்கப்பட்டிருக்கிறது.

என் கை, ஒரு கையாய் அருமையான வேலையைச் செய்கின்றது. அது என் வேதாகத்தைத் திறக்கின்றது. அதன் பக்கங்களைத் திருப்புகின்றது. நான் அதனிடம் கேட்கின்ற எல்லா வேலைகளையும் அது செய்து விடுகின்றது.

மாறாக, இந்த வேலைகளை என் கால்களைக் கொண்டு செய்யும்படி நான் முயற்சித்தால், அது சிக்கலில் போய் முடியும்.

நீங்கள் எப்பொழுதுமே விசுவாசத்திற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஒருவேளை நீங்கள் தவறான ஒரு வேலையைச் செய்யும்படி முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.

ஒரு கையாய் இருந்து கொண்டு, காலாய் இருக்கும்படி நீங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு காலாய் இருந்து கொண்டு, கையாய் செயல்படும்படி நீங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்குரிய இடத்திற்கு நேராய் தேவன் உங்களை வழி நடத்துகிற ஒரு வழிமுறையாய் இது இருக்கிறது.

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் என்னை உருவாக்கியிருக்கிறீர். நான் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அங்கமாய் இருக்கிறபடியால், தேவன் என்னை எனக்குரிய இடத்திற்கு நேராக வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்.